

புதுடெல்லி:
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள், பார்சி மற்றும் கிறிஸ்தவர்கள் இந்தியாவில் தங்குவதற்கு வசதியாக நீண்டகால விசா வழங்க மத்திய அரசு அண்மையில் முடிவு செய்தது. இதன் மூலம் அவர்கள் இந்தியாவில் சொந்த பயன்பாட்டுக்கு சிறிய அளவில் வீடுகளை வாங்கவும் இயலும். ஆனால் பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கு அருகில் இடங்களில் அசையா சொத்துகளை வாங்க முடியாது.
இந்த நிலையில் தங்களுடைய சொந்த நாட்டுக்கு வந்து செல்வதற் காக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்தில் வசிக்கும் 431 இந்தியர்களுக்கு நீண்ட கால விசாவை மத்திய அரசு வழங்கியது. இவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள் ஆவர். இவர்களுக்கு, நீண்டகால விசாக்கள் கடந்த மாதம் வழங்கப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
இதுபற்றி வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “இவர்கள் பான்கார்டு, ஆதார் எண், டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியின்றி இவர்கள் வங்கிக் கணக்கு தொடங்கலாம்” என்று தெரிவித்தார்.