அடிக்கடி கருத்தடை மாத்திரை... இத்தனை பாதிப்புகளா?

அடிக்கடியோ, தொடர்ந்தோ அவசரகால கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்வது பெண்களின் உடல் நலத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
அடிக்கடி கருத்தடை மாத்திரை... இத்தனை பாதிப்புகளா?
Published on

இன்றைய காலகட்டத்தில் இளம் தம்பதியர் சிலர் குழந்தை பேற்றை தள்ளிப்போட விரும்புகிறார்கள். ஓரளவுக்கு வாழ்க்கையில் செட்டிலாகிவிட வேண்டும் என்ற எண்ணமே அதற்கு காரணமாக இருக்கிறது. எதிர்பாராதவிதமாக கர்ப்பம் தரிப்பதை தடுக்க அவசரகால கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.

அடிக்கடியோ, தொடர்ந்தோ அவசரகால கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்வது பெண்களின் உடல் நலத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இந்த மாத்திரைகள் அவசர தேவைக்காக பயன்படுத்தப்பட வேண்டியவையே தவிர, வழக்கமான கருத்தடை முறையாக தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்துகின்றனர்.

சமீப காலங்களில் சில பெண்கள் இந்த மாத்திரைகளை குறுகிய கால இடைவெளியில் பயன்படுத்தும் நிலை அதிகரித்து வருவதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதிக அளவு ஹார்மோன்கள் கொண்ட இந்த மாத்திரைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்களை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

ஏனெனில் அவசர கால கருத்தடை மாத்திரைகளை அடிக்கடி பயன்படுத்தும் பெண்களிடம் மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்படுவது பொதுவான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனால் மாதவிடாய் தாமதமாகுதல், வழக்கத்தை விட அதிக ரத்தப்போக்கு ஏற்படுதல் அல்லது மாதவிடாய் இடைப்பட்ட காலத்தில் சிறிய அளவில் ரத்தப்போக்கு காணப்படுதல் போன்ற பிரச்சனைகள் தோன்றக்கூடும்.

இந்த அவசர கால கருத்தடை மாத்திரைகளில் அதிக அளவு ஹார்மோன்கள் இருப்பதால் அடிக்கடி பயன்படுத்தும்போது கருமுட்டை உற்பத்தி செயல்முறை பாதிக்கப்பட்டு மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்றதாக மாற வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த மாத்திரைகளை பயன்படுத்தும் சிலருக்கு தலைவலி, குமட்டல், வாந்தி, அசாதாரண ரத்தப்போக்கு அல்லது மாதவிடாய் சுழற்சியில் கோளாறு போன்ற பிரச்சனைகள் தோன்றலாம்.

அத்துடன் அவசர கருத்தடை மாத்திரைகள் கர்ப்பத்தைத் தடுப்பதற்காக மட்டுமே பயன்படுகின்றன. பாலியல் தொடர்பான தொற்றுநோய்களில் இருந்து எந்த பாதுகாப்பையும் வழங்காது என்பதையும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். பாதுகாப்பான கருத்தடை முறைகள் குறித்து விழிப்புணர்வுடன் செயல்படுவதே பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வழிவகை செய்யும் என்றும் கூறுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com