வெறும் வயிற்றில் வெந்நீரை பருகுவது நல்லதா?
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அதேவேளையில் தண்ணீருக்கு பதிலாக வெந்நீரை பருகுவது நல்லதா? என்ற கேள்விக்கு, அதுவும் ஆரோக்கியத்திற்கு நல்லதே என்பது மருத்துவர்களின் பதிலாக இருக்கிறது.
காலையில் தூங்கி எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான வெந்நீரை குடிப்பது உடலை மீண்டும் நீரேற்றமடைய செய்து கழிவுகளை வெளியேற்ற சிறுநீரக செயல்பாட்டை தூண்டிவிடும். வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கச் செய்யும். காலை உணவுக்கு முன்பு உட்கொள்வதால் பசியை கட்டுப்படுத்தவும் உதவிடும்.
காலை வேளையில் இந்த சூடான திரவத்தை உட்கொள்வது மூக்கு மற்றும் தொண்டை அடைப்பை தடுக்கும். தசைப்பிடிப்பு அல்லது தசை வலிக்கு இந்த வெப்ப நீர் இதமளிக்கும். குடல் இயக்கத்தை தூண்டும். மலச்சிக்கலை குறைக்கும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். செரிமான நொதிகளைத் தூண்டி, சிறந்த செரிமானத்திற்கு உதவும். வயிற்று உப்பு சத்தை குறைக்கும். உடல் எடை குறைப்புக்கு உதவும்.
அதேவேளையில் மிக சூடான நீரை அருந்துவது வாய், தொண்டை பகுதியின் மென்மைத்தன்மையை சேதப்படுத்தும். சில சமயங்களில் வயிற்றை எரிச்சலடைய செய்யலாம். அதாவது 60 டிகிரி செல்சியஸ் (140 டிகிரி பாரன்ஹீட்) வெப்ப நிலைக்கு மேல் இருக்கும் சூடான நீரை பருகக்கூடாது. காலையில் விழித்தெழுந்தவுடன் ஒரு டம்ளர் அல்லது இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடிப்பது போதுமானது.

