

சமைப்பதற்கு முன்பு அரிசியை தண்ணீரில் ஊற வைப்பதுதான் பொதுவான நடைமுறையாக இருக்கிறது. குறிப்பிட்ட நிமிடங்கள் அரிசி நன்றாக ஊறியதும், அரிசியை நன்றாக கைகளால் கழுவிவிட்டு அந்த தண்ணீரை வெளியேற்றிவிடுவார்கள். பின்பு மீண்டும் அரிசியில் தண்ணீரை ஊற்றி அலசி அரிசியை சுத்தப்படுத்துவார்கள். அப்படி அரிசியை கழுவும்போது வெளியேற்றும் நீரில் அழுக்கு, தூசு மட்டும் அகலுவதில்லை. அரிசியில் இருக்கும் சில சத்துக்களையும் சேர்த்துத்தான் வெளியேற்றுகிறார்கள் என்பது பலருக்கும் தெரிவதில்லை என்று 'லைவ் சயின்ஸ்' ஆய்வறிக்கை கூறுகிறது.
அரிசியை கழுவும்போது அதிலிருக்கும் தாமிரம், இரும்பு, துத்தநாகம் மற்றும் வனேடியம் போன்ற நீரில் இயல்பாகக் கரையக்கூடிய சில முக்கிய சத்துக்களின் அளவு குறைந்துபோய்விடும். இவை உடலுக்குத் தேவையான சத்துக்களாகும். ஒவ்வொரு முறை அரிசியைக் கழுவும்போதும் இவற்றில் சிறிதளவு இழக்கப்படுகிறது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இருப்பினும், ஒருவரின் அன்றாடத்தேவைக்கான சத்துக்களில் மிகச்சிறிய சதவீதத்தை மட்டுமே அரிசி வழங்குகிறது. எனவே, அரிசியைக் கழுவுவவதால் அதிலிருக்கும் ஊட்டச்சத்து பெரிய அளவில் பாதிப்படையாது என்று ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உணவியல் நிபுணர் இவாஞ்சலின் மான்சியோரிஸ் கூறுகிறார்.
சமைப்பதற்கு முன்பு அரிசியைக் கழுவுவது அதில் உள்ள நுண்-பிளாஸ்டிக்கின் அளவை 20 முதல் 40 சதவீதம் வரை குறைப்பதாக 2021-ம் ஆண்டு ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. நுண்-பிளாஸ்டிக்கால் ஏற்படும் முழுமையான உடல்நலப் பாதிப்புகள் குறித்து இன்னும் ஆய்வுகள் நடந்து வந்தாலும், அவை தீங்கு விளைவிக்கக்கூடியவை என்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஆனால் அதே பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞானி பெர்மல் டியோ அரிசியை கழுவுவது சரியான நடைமுறைதான் என்று சொல்கிறார். "நெல்லை விளைவிக்கும்போது மண் மற்றும் நீரில் இருந்து உறிஞ்சப்பட்ட கனிம ஆர்சனிக் அரிசியில் இயற்கையாகவே இருக்கக்கூடும். அரிசியை கழுவும்போது அதன் மேற்பரப்பில் உள்ள ஆர்சனிக்கை ஓரளவு அகற்ற உதவும். தூசி அல்லது பூச்சிகளை அகற்றுவதை விட இது முக்கியமானது" என்பது அவருடைய கருத்தாக இருக்கிறது.
அடிலெய்டு பல்கலைக்கழகத்தின் மற்றொரு உணவு விஞ்ஞானியான போவாங், சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் அரிசி நுகர்வோரைச் சென்றடைவதற்கு முன்பே சுத்தம் செய்யப்பட்டு, உலர்த்தப்பட்டு, உமி நீக்கப்பட்டு, அரைக்கப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு பேக் செய்யப்படுகிறது என்று குறிப்பிடுகிறார். எனவே உணவுப்பாதுகாப்பு காரணங்களுக்காக அதைக் கழுவ வேண்டிய அவசியமில்லை என்றும் கூறுகிறார்.
சுருக்கமாகச் சொன்னால், அரிசியை சமைப்பதற்கு முன் ஒன்று அல்லது இரண்டு முறை மென்மையாகக் கழுவுவதே போதுமானது.