நுரையீரலை பலப்படுத்தும் வீரபத்ராசனம் 2

உடல் மற்றும் மனதின் நிலையான தன்மை மேம்படுகிறது. தோள், முதுகு, இடுப்புப் பகுதியில் பிரச்சினை உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும்.
நுரையீரலை பலப்படுத்தும் வீரபத்ராசனம் 2
Published on

வடமொழியில் 'வீர' என்பதற்கு 'போர்வீரன்' என்றும் 'பத்ர' என்பதற்கு 'சுபம்' மற்றும் 'துணை' என்றும் பொருளாகும். அதாவது, அனுகூலமான போர்வீரன் என்று பொருள்.

வீரபத்ராசனம் 2-ல் மூலாதாரம் மற்றும் மணிப்பூரக சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இவ்வாசனத்தைத் தொடர்ந்து பழகும் போது உடல் மற்றும் மனதின் நிலையான தன்மை மேம்படுகிறது. மேலும், வீரபத்ராசனம் 2 உடலின் தாங்கு திறனை அதிகரிக்கிறது.

பலன்கள்

நுரையீரலைப் பலப்படுத்துகிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. கைகளை பலப்படுத்துகிறது. வயிற்று உள்உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. கால்களை, குறிப்பாக தொடைகளை, உறுதியாக்குகிறது.

இளம் வயதிலிருந்தே செய்து வந்தால் தட்டை பாதம் சரியாகிறது. சையாடிக் வலியைப் போக்க உதவுகிறது. மூட்டுகளை பலப்படுத்துகிறது.

முதுகு வலியைப் போக்க உதவுகிறது. தோள் மற்றும் இடுப்புப் பகுதியை நீட்சியடையச் செய்கிறது. உடலின் சமநிலையை மேம்படுத்துகிறது. கவனத்தைக் கூர்மையாக்குகிறது.

செய்முறை

விரிப்பில் தாடாசனத்தில் நிற்கவும். மூச்சை வெளியேற்றியவாறே கால்களை சுமார் 4 அடி விலக்கி வைக்கவும். மூச்சை உள்ளிழுத்தவாறு கைகளைப் பக்கவாட்டில் உயர்த்தவும். கைகள் தோள் உயரத்தில் நேராக இருக்க வேண்டும். வலது பாதத்தை வலதுபுறம் நோக்கித் திருப்பவும். இடது பாதத்தை நேராக வைக்கவும் அல்லது சற்றே வலதுபுறம் நோக்கித் திருப்பவும். வலதுபுறம் பார்க்கும் வண்ணம் தலையைத் திருப்பவும். 30 வினாடிகள் இந்த நிலையில் இருந்தபின் ஆரம்ப நிலைக்கு வந்து எதிர்த் திசையில் மீண்டும் செய்யவும்.

தீவிர கழுத்து வலி உள்ளவர்கள் தலையைத் திருப்பாமல் நேராகப் பார்த்தவாறு ஆசனத்தைப் பயிலவும். தோள், முதுகு மற்றும் இடுப்புப் பகுதியில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com