search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் தொட்டில் யோகா...
    X

    உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் தொட்டில் யோகா...

    • தொட்டில் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளுவதால் ரத்த ஓட்டம் சீராகும்.
    • முதுகுவலி பிரச்சனை உள்ளவர்கள் இந்த யோகாவை செய்யலாம்.

    குழந்தையாக இருந்தபோது அம்மாவின் புடவையில் தொட்டில் கட்டி விளையாடி இருப்போம். காற்றில் அசையும் தொட்டிலோடு, நாமும் அசைந்து ஆடி மகிழ்ந்திருப்போம். தற்போது அதே தொட்டிலைகொண்டு யோகா பயிற்சி செய்து வருகிறார்கள். ஆங்கிலத்தில் ஆன்ட்டி கிராவிட்டி எனும் இந்த பயிற்சியை அழகு தமிழில் தொட்டில் யோகா என்கிறோம். தலை முதல் கால் வரை பல நன்மைகளை கொடுக்கக்கூடிய இந்த பயிற்சியை எளிதாகவும், சுலபமாகவும் செய்யலாம். யோகாவில் காலில் அழுத்தம் கொடுத்து செய்யும் பயிற்சிகள் சிரமமானது. அதனாலேயே யோகா கற்கும் பலரும் இந்த பயிற்சிகளை தொடருவது இல்லை.

    அவர்களுக்குக்கெல்லாம் வரப்பிரசாதமாக அமைந்திருப்பது தொட்டில் யோகா. தரையின் மீது செய்யும் அனைத்து யோகா பயிற்சிகளையும், தொட்டில் யோகா முறையில் செய்யலாம். சிரமமின்றி எளிதாக ரசித்தபடியே இந்த யோகாவை செய்வதால் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். தொட்டில் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளுவதால் ரத்த ஓட்டம் சீராகும். முதுகுவலி பிரச்சனை உள்ளவர்கள் இந்த யோகாவை செய்யலாம். இதனால் வலி குறையும். முதுகு பகுதியில் உள்ள முக்கியமாக தசைகள் வலுவடைவதால் முதுகொலும்பு, தோள் பட்டை போன்றவற்றின் நெகிழ்வுத்தன்மை மேம்படுத்த முடியும்.

    தொட்டில் யோகாவில் பலவித அசைவுகள் இருப்பதால், ஜீரண உறுப்புகள் சீராக செயல்படும். இதன் மூலம் ஜீரண கோளாறுகள் குணமாகும். மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இன்றைய காலக்கட்டத்தில் பலரும் ஒரே இடத்தில் உடல் அசையாமல் அமர்ந்து பல மணிநேரம் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கான சிறந்த பயிற்சியாக தொட்டில் யோகா அமைகிறது. இதில் பல அசைவுகள் நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் உடலின் வளைவுத்தன்மை அதிகரிக்கும். 16 வயது முதல் 55 வயது வரை உள்ள யார் வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம். உயர் ரத்த அழுத்தம், இதயப்பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

    கா்ப்பிணிப் பெண்கள், சமீபத்தில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவா்கள், இரத்த கொதிப்பு உள்ளவா்கள், கீழ்வாதம் உள்ளவா்கள், இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளவா்கள் மற்றும் சில உடல் உறுப்பு குறைபாடு உள்ளவா்கள் தொட்டில் யோகாவை செய்யாமல் இருப்பது நல்லது.

    எந்த யோகா செய்வதாக இருந்தாலும் உடல் இலகுவாக இருக்க வேண்டும். தொட்டில் யோகாவிலும் இதே வழிமுறைதான் பின்பற்றப்படுகிறது. பயிற்சி செய்வதற்கு முன்பு திட உணவை சாப்பிடக்கூடாது. முடிந்தவரை பழச்சாறு, தண்ணீர் அருந்துவது சிறந்தது. அவசர கதியில் பயிற்சி செய்யாமல் நிதானமாக செய்தால் மனம் இலகுவாகும். தளர்வான ஆடைகள் அணியாமல் உடலுக்கு ஏற்ற சற்றே இறுக்கமான ஆடைகளை அணியலாம். தொட்டில் யோகாவை செய்வதற்கு முன் சிறிது தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. இதன் அடிப்படைகளை தெரிந்து கொண்டால் வீட்டிலேயே பயிற்சி செய்யலாம்.

    Next Story
    ×