search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சென்னிமலையில் கிரிவலம் செல்ல பாதை அமைக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை
    X

    சென்னிமலையில் கிரிவலம் செல்ல பாதை அமைக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை

    • தமிழ்நாட்டில் கிரிவலத்துக்கு புகழ் பெற்றது திருவண்ணாமலை.
    • சென்னிமலையில் பவுர்ணமி கிரிவலம் சுமார் 25 ஆண்டுகளாக நடக்கிறது.

    முருகபெருமானை தரிசிக்க, இரட்டை மாடுகள் ஆயிரம் படிக்கட்டுகளுக்கு மேல் உள்ள மலையில் படிக்கட்டுகள் வழியாக வண்டி இழுத்த அதிசயம் சென்னிமலையில் நடந்தது. ஆண்டுகள் பல கடந்தாலும் இந்த அதிசயத்தை கூறி சிலாகிக்கும் பக்தர்கள் ஒருபுறம். மாடுகளே ஏறிச்சென்ற படிகள் வழியாக சென்று பெருமானை தரிசித்து அவர் ஆசி பெற துடிக்கும் பக்தர்கள் இன்னொருபுறம். செவ்வாய்க்கிழமை அதிகாலையிலேயே முருகபெருமானை தரிசிக்க, கார்களிலும் மோட்டார் சைக்கிள்களிலும் மலைப்பாதையில் வட்டமிடும் பக்தர்கள் ஒருபுறம் என்று ஈரோடு மாவட்டத்தின் முக்கிய ஆன்மிகத்தலமாக சென்னிமலை விளங்குகிறது.

    கடல் மட்டத்தில் இருந்து 1,749 அடி உயரத்தில் அமைந்து உள்ள சென்னிமலை 1,700 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு சுப்பிரமணியசாமியாக எழுந்தருளி இருக்கிறார் முருகபெருமான். 18 பெரும் சித்தர்களில் ஒருவராக விளங்கும் பின்நாக்கு சித்தர் (புண்ணாக்கு சித்தர்) வாழ்ந்த குகை இங்கு இருப்பதாக நம்பப்படுகிறது. சித்தர்கள் இன்னும் இந்த மலையில் கண்ணுக்கு மறைவாக வாழ்ந்து வருவதாகவும், அதிசய மூலிகைகள் பல இங்கு இருப்பதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது. எனவே சென்னிமலையில் வீசும் காற்றை சுவாசிப்பது உடலுக்கும், இங்கு பக்தியுடன் இறைவேண்டல் செய்வதும் மனதுக்கு நிம்மதி அளிப்பதாக இருக்கிறது.

    பல ஆண்டுகளாக சென்னிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இங்கு கிரிவலம் செல்லும் நிகழ்வும் பிரபலம் அடைந்து வருகிறது. புவுர்ணமி தோறும் பக்தர்கள் சென்னிமலையை சுற்றி வந்து முருகபெருமானை தரிசிக்கிறார்கள். இதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சியும், வாழ்வில் முன்னேற்றமும் கிடைப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

    மாதம் தோறும் பவுர்ணமி அன்று மாலை 5.30 மணிக்கு கிரிவலக்குழுவினர் சென்னிமலை அடிவாரத்தில் உள்ள சித்திவிநாயகர் கோவில் முன்பு இருந்து தங்கள் கிரிவலத்தை தொடங்குகிறார்கள். அங்கிருந்து தட்டாங்காட்டுபுதூர், நல்லபாளி, வெப்பிலி, சில்லாங்காட்டுவலசு, அய்யம்பாளையம், தோப்புப்பாளையம், எம்.பி.என்.காலனி, தொட்டம்பட்டி, பள்ளக்காட்டுப்புதூர் மற்றும் மேலப்பாளையம் ஆகிய கிராமங்கள் வழியாக சுமார் 18 கி.மீ தூரம் சுற்றி வருகிறார்கள். கிரிவலம் இரவு 10 மணியளவில் மலையடிவாரத்திலேயே முடிகிறது. இது ஒரு வேண்டுதல் நிகழ்வாக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் உயிர்பயத்துடனே கிரிவலம் செல்ல வேண்டியது இருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.

    அது ஏன்?.

    இதுகுறித்து சென்னிமலை, குமராபுரியை சேர்ந்த சவுமியா ரமேஷ் கூறியதாவது:- நான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னிமலையில் கிரிவலம் சுற்றி வருகிறேன். இங்குள்ள வனப்பகுதியில் வெண்சாலை, வெண்தவளை, கானாச்சுனை, கரநொச்சி உள்ளிட்ட 16 வகையான சஞ்சீவி மூலிகைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம் என 24 தீர்த்தங்கள் அமைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே சென்னிமலையில் கிரிவலம் செல்வது உண்மையிலேயே ஆன்மிக ரீதியாக மட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் நமக்கு புத்துணர்ச்சி அளிப்பதாகவும் இருக்கிறது. கிரிவலம் செல்பவர்கள் மூலிகை, தீர்தங்களை மட்டும் சுற்றி வருவது நல்லது. ஆனால், இங்கு அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு கிடைப்பதில்லை. மலைக்கு தொடர்பு இல்லாமல் கிரிவலம் செல்வது இங்குதான். ஆனால் பக்தி காரணமாக, முருக பெருமானின் அருள் கிடைக்குமே என்று நாங்கள் சுற்றுகிறோம். பக்தர்களின் வேதனை தீர மலையை ஒட்டி கிரிவலப்பாதை அமைக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் கிரிவலத்துக்கு புகழ் பெற்றது திருவண்ணாமலை. அங்கு கிரிவலப்பாதை 10 கிலோ மீட்டர் மட்டும்தான். ஆனால், சென்னிமலையில் பல ஊர்களையும் சுற்றிக்கொண்டு 18 கிலோ மீட்டர் தூரம் நடக்கிறோம். இப்படி ஊர்களை கடக்கும்போது சாலையில் வேகமாக வரும் வாகனங்களை பார்த்து உயிர்பயத்துடனே கடக்க வேண்டியது இருக்கிறது. எனவே மலையை ஒட்டி கிரிவலப்பாதை அமைக்க வேண்டும்.

    சென்னிமலை அருகே சொக்கநாதபாளையத்தை சேர்ந்த கலைவாணி பாஸ்கர் கூறியதாவது:- சென்னிமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் சாலைகள், சுடுகாடு, இடுகாடு என பல பகுதிகளை கடந்து செல்கின்றனர். சில நேரம் உயிரை கையில் பிடித்து கொண்டு செல்ல வேண்டிய நிலையும் உள்ளது. வெப்பிலி - அய்யம்பாளையம் ரோட்டில் கிரிவலம் செல்லும் போது குறுகலான ரோட்டில் அதிக வாகனங்கள் வரும்போது பக்தர்கள் கடுமையாக சிரமப்படுகிறார்கள். சில்லாங்காட்டுவலசு பிரிவில் பக்தர்கள் நடந்து செல்லும்பாதையிலேயே டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. மது குடித்தவர்கள் போதையில் 2 சக்கர வாகனங்களில் வேகமாக செல்வதால் பெண்களும், குழந்தைகளும் பயந்தபடியே கிரிவலம் செல்கின்றனர். எனவே மலையை ஒட்டி கிரிவலப்பாதைக்காக ரோடு அமைக்க வேண்டும்.

    சென்னிமலையை சேர்ந்த சந்தியா மனோஜ் கூறியதாவது:- சென்னிமலையில் அதிக அளவில் பெண்களும், குழந்தைகளும் கிரிவலம் செல்கிறோம். கிரிவலம் செல்லும் போது மலையை மட்டும் சுற்றி வந்தால் மனதுக்கு மட்டுமின்றி உடலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். ஆனால் பல ஊர்களை சுற்றி செல்வதால் போக்குவரத்து நெருக்கடிக்கு மத்தியில் மன அமைதி குறைந்து விடுகிறது. சென்னிமலையில் சரியான கிரிவல பாதை இல்லை என்பதே முருக பக்தர்களின் வேதனையாக இருக்கிறது. அய்யம்பாளையத்தில் இருந்து தோப்புப்பாளையம் வரை 2 கி.மீ தூரத்திற்கு தெரு விளக்குகள் இல்லை. பெண்கள் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். கிரிவலப்பாதை என்று தனியாக ஒரு சாலை அமைக்கப்பட்டால், பவுர்ணமி நிலவு ஒளியில் கூட நடக்க முடியும். ஆனால் தற்போதைய சாலை அச்சத்தை அளிப்பதாக இருப்பதால் இங்கு மின் விளக்குகள் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    20 ஆண்டுகளுக்கு முன்பு

    சென்னிமலையில் பவுர்ணமி கிரிவலம் சுமார் 25 ஆண்டுகளாக நடக்கிறது. இந்த வழக்கம் தொடங்கப்பட்ட போதே கிரிவலப்பாதை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. எனவே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னிமலையை சேர்ந்த சில அமைப்புகள் ஒருங்கிணைந்து கிரிவலப்பாதை அமைக்க முன்வந்தனர். இதற்காக மலை அடிவாரத்தில் பூஜையும் போடப்பட்டது. ஆனால் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் கிரிவலப்பாதை அமைப்பதற்கான பணிகள் சென்னிமலையின் தெற்கு வன பகுதியான தட்டாங்காட்டுபுதூர் அருகே தொடங்கப்பட்டது. தொடங்கிய 2 நாட்களிலேயே பணிகள் நிறுத்தப்பட்டன. பின்னர் கிரிவலப்பாதை அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் தொடர்ந்து சிரமத்துடன் கிரிவலம் சுற்றுகிறார்கள்.

    எதிர்பார்ப்பு

    இதுகுறித்து சென்னிமலை கோவில் அதிகாரிகள் கூறும்போது, 'சென்னிமலை வனப்பகுதி முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் இங்கு கிரிவல பாதை அமைக்க எந்தவித சாத்தியக்கூறுகளும் இல்லை. சென்னிமலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன' என்றனர். வனத்துறைக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் உள்ள பிரச்சினையாக இதை பார்க்காமல் பக்தர்களின் ஆன்மிக உணர்வு மற்றும் பாதுகாப்பு என்ற வகையில் கிரிவலப்பாதை அமைக்க தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும், வனத்துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×