search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சின்ன வடுகந்தாங்கல் பாலமுருகன் கோவில் நாக தேவதைகள் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது
    X

    பாலமுருகனையும், கோவிலின் தோற்றத்தையும் படத்தில் காணலாம்.

    சின்ன வடுகந்தாங்கல் பாலமுருகன் கோவில் நாக தேவதைகள் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது

    • இன்று அரசமர வேப்பமர திருக்கல்யாணம் நடக்கிறது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    கே.வி.குப்பம் தாலுகா சின்ன வடுகந்தாங்கல் மலைச்சாரலில் பவ வருடம் வைகாசி மாதம் 10-ந்தேதி விசாகம் நட்சத்திரம் அன்று பக்தர்கள் சிலரின் கண்களுக்கு பாலமுருகனாய் காட்சி தந்து சின்ன வடுகந்தாங்கல் மலையில் அவதரித்தார். முருகனே விக்ரகமாக கிடைக்கப்பெற்ற பேரானந்தத்தில் சின்ன வடுகந்தாங்கல் மற்றும் அக்கம் பக்கத்து கிராமமக்கள் பாலமுருகனுக்கு அபிஷேகம், ஆராதனை செய்து அருகே உள்ள கிராமங்களின் தெருக்களில் உற்சாகத்துடன் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

    பின்னர் முருகன் அவதரித்த மலையிலேயே தென்னங்கீற்று கொட்டகை அமைத்து, அதில் அவரை எழுந்தருள செய்து மாதந்தோறும் விழா கொண்டாடினர். 1994 பவ வருடம் ஆடிமாதம் 17-ந் தேதி முதல் ஆடி கிருத்திகை காவடி வைபவமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    குடிசையில் இருந்தாலும் குமரன் அருள் கோபுரம்போல அனைவருக்கும் கிடைத்தது. முருகன் அருள்பார்வை பெற்ற அனைவரும் பலபடி உயர்ந்தனர். அதன் பின்னர் முருகனுக்கு கோவில் அமைக்கப்பட்டது. ஆண்டு தோறும் ஆடிமாத காவடி தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த கோவிலுக்கு வந்து வேண்டுதல் செய்து சென்றால் திருமணம் உடனே கூடிவரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த முருகன் அவதரித்த ஸ்ரீ பாலமுருகன் கோவில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள குளக்கரையில் உள்ள அரசமரத்தடியில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் அரசமர வேப்பமர திருக்கல்யாணமும், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் புதிதாக அமைக்கப்பட்ட நாகதேவதைகள் சிலைகள் கும்பாபிஷேக விழாவும் நடைபெற உள்ளது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ பாலமுருகன் கோவில் நிர்வாகிகள், மேட்டுக்குடி ஊர்பொதுமக்கள், சின்ன வடுகந்தாங்கல் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    Next Story
    ×