search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் திருக்கோவில்
    X

    5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் திருக்கோவில்

    • விஷ்ணுவே வீரராகவப் பெருமாளாக இக்கோவிலில் குடி கொண்டுள்ளார்.
    • தீராத நோய்களை வீரராகவர் தீர்த்து வைப்பார்.

    மூலவர்:வீரராகவப் பெருமாள்

    தாயார்:கனக வல்லித் தாயார் (வசுமதி).

    தீர்த்தம்: ஹ்ருத்தபாப நாசினி

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலம் திருமழிசை ஆழ்வார், திருநங்கை ஆழ்வார், துப்பூர் வேதாந்த தேசிகன் உள்ளிட்டோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது என்பது இதன் தனிச்சிறப்பு.

    இத்திருக்கோவிலை அகோபில மடம் பராமரித்து வருகிறது. இத்திருக்கோவில் ஐந்தடுக்கு இராசகோபுரத்துடன் (பிரதான வாயில்) பல்லவர்களால் கட்டப்பட்டது ஆகும். கனகவள்ளி அம்மையார், கணேச ஆழ்வார், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகன், இராமானுச ஆச்சாரியார், லட்சுமி நரசிம்மர் ஆகியோருக்கு இங்கு தனித் தனியே சிறு ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. இங்குதான் இறைவன் அரசன் தர்மசேனனின் மகள் வசுமதியைத் திருக்கல்யாணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

    இங்குள்ள கல்வெட்டுகள் பொ.ஊ. 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பல்லவர்களின் இரண்டாவது பாதியைக் குறிப்பிடுகின்றன. இக்கோவில் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என உள்ளூரில் புழக்கத்திலுள்ள புராணக் கதைகள் தெரிவிக்கின்றன. விஷ்ணுவே வீரராகவப் பெருமாளாக இக்கோவிலில் குடி கொண்டுள்ளார்.

    தல வரலாறு

    புரு எனும் முனிவரின் யாகத்தின் பயனாய்ப் பிறந்த சாலிஹோத்ரர் எனும் முனிவர் இங்கு தவம் செய்து வந்தார். தினமும் அதிதிக்குப் படைத்த பின்பு உண்பவரான சாலிஹோத்ர முனிவரின் அதிதியாகப் பெருமாளே வயோதிகர் வடிவில் வந்து உணவு பெற்றார். பசி தீராததாகக் கூறி முனிவரின் பங்கையும் உண்டு பசியாறிய பின்னர், உண்ட களைப்புத் தீர எங்கே படுப்பது என முனிவரிடம் வினவ, முனிவர் தம் ஆசிரமத்தைக் காட்டினார். அங்கே பெருமாளாக சயனித்தார். "படுக்க எவ்வுள்" என்று கேட்டதால் ஊர் பெயர் எவ்வுள்ளூர் என்றும் எவ்வுட்கிடந்தான் என்பது பெருமாள் திருப்பெயருமாயிற்று.

    ஸ்ரீதேவித் தாயார் வசுமதி எனும் பெயரில் திலிப மகாராஜாவிற்குப் பெண்ணாக அவதரித்து வாழ்ந்து வர, வீரநாராயணன் எனும் பெயருடன் வேட்டைக்குச் சென்ற பெருமாள், தாயாரை மணமுடித்ததாகத் தல வரலாறு.

    அதன் பின்னரே பெருமாள் பெயர் மாறிற்று, அது வரை கிங்கிருஹேசன் எனும் பெயரே பெருமாளுக்கு முக்கியத் திருப்பெயராக விளங்கிற்று.

    இக்கோவிலின் இறைவன் "வைத்திய வீரராகவர்" என்றும் அழைக்கப்படுகிறார். தீராத நோய்களை வீரராகவர் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் மக்கள் சிறிய உலோகத் தகட்டில் நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்பைச் செதுக்கி அந்நோயைத் தீர்த்து வைக்குமாறு கடவுளிடம் கோரிக்கை சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இறைவனுக்கு இங்கு சந்தன எண்ணெயால் மட்டும் அபிசேகம் செய்யப்படுகிறது.

    ஐந்தடுக்கு ராஜகோபுரத்துடன் காணப்படும் இக்கோவிலில் வீரராகவப் பெருமாள் வைத்திய வீரராகவப் பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். பெருமாள் புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கிக் காணப்படும் வகையில் காணப்படுகிறார். மூலவரின் வலது புறம் சாலி கோத்திர மகரிஷி, இடதுபுறம் பிரம்மாவுக்கு உபதேசிக்கும் ஞான முத்திரையும் நிறுவப்பட்டுள்ளது.

    மூலவர் பெருமாளுக்கு சந்தன தைலத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. கனகவல்லி தாயார் சன்னதி அருகில் ஆழ்வார், கணேசர், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகர், ராமானுஜாச்சாரியார், லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ ரங்கநாதர், அனுமான் சன்னதிகளும் அமைந்துள்ளன.

    இக்கோவிலில் இடம்பெற்றுள்ள சாலி கோத்திர மகரிஷிக்கு, தை அமாவாசை அன்று பெருமாள் காட்சி தந்ததால் தை அமாவாசை வழிபாட்டுக்கு உகந்ததாகவும் இத்தலம் கருதப்படுகிறது. இத்தினத்தில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபடுவதும் சிறந்த பலனைத் தரும் என்பது ஐதீகம்.

    சிவபெருமான் தனது தோஷம் நீங்க இத்தலத்துப் பெருமாளை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றதாகவும் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீராத நோயால் வருந்துபவர்கள் இத்தலத்தில் ஒன்பது கரைகளுடன் அமைந்துள்ள தீர்த்தத்தில் நீராடி, பெருமாளைத் தரிசித்தால் நோய்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இத்தலத்தில் அமாவாசை தினம் சிறந்த வழிபாட்டு நாளாகக் கருதப்படுகிறது. இது தவிரப் பிரம்மோற்சவம், சித்திரை உற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமை, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற வழிபாட்டுத் தினங்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பக்தவச்சத பெருமாளுக்கும் கண்ண மங்கை தாயாருக்கும் தினசரி ஆறு கால பூஜை பாரம்பரிய முறைப்படி நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×