search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    அம்மனின் 51 சக்தி பீடங்களில் தர்ம சக்தி பீடமாக போற்றப்படும் ஐயாறப்பர் கோவில்
    X

    அம்மனின் 51 சக்தி பீடங்களில் தர்ம சக்தி பீடமாக போற்றப்படும் ஐயாறப்பர் கோவில்

    • இங்கு மூலவராக ஐயாறப்பர் அருள்பாலிக்கிறார்.
    • மிகவும் பழமையான சிவதலங்களில் இதுவும் ஒன்றாகும்.

    மூலவர்:ஐயாறப்பன், பஞ்ச நதீஸ்வரர்

    அம்மன்/தாயார்:தரும சம்வர்த்தினி

    தல விருட்சம்:வில்வம்

    தீர்த்தம்:சூரிய புஷ்கரணி தீர்த்தம், காவேரி

    ஊர்:திருவையாறு

    தஞ்சை மாவட்டம் திருவையாறில் ஐயாறப்பர் கோவில் உள்ளது. காவிரி கரையில் அமைந்துள்ள மிகவும் பழமையான சிவதலங்களில் இதுவும் ஒன்றாகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற தலமாக இக்கோவில் விளங்குகிறது.

    தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரை தலங்களில் அமைந்துள்ள 51-வது தலமாகவும் உள்ளது. இங்கு மூலவராக ஐயாறப்பர் அருள்பாலிக்கிறார். இவர் சுயம்பு மூர்த்தி ஆவார். அவரது ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். சிவபெருமானின் ஜடா முடியை மிதிக்கக்கூடாது என்பதால் சன்னதியை சுற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இறைவியாக அறம்வளர்த்தநாயகி எனும் தர்மசம்வர்த்தினி அம்மன் அருள்புரிகிறார். இக்கோவிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு இடத்தில் நின்று கொண்டு ஐயாறப்பர் என உரக்க கூறினால் 7 முறை திரும்ப கேட்பது சிறப்பம்சமாகும். கோயில் என்றாலே சுவாமி சன்னதியை சுற்றுவது முக்கியமான அம்சம்.ஆனால், திருவையாறு ஐயாறப்பன் கோயிலில் சுவாமி சன்னதியை சுற்றக்கூடாது என்ற தடை உள்ளது.

    கோவிலின் தெற்கு வாசலில் ஆட்கொண்டேஸ்வரர் அருள்பாலிக்கிறார். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது தர்ம சக்தி பீடமாக போற்றப்படுகிறது. திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

    நவக்கிரகங்களில் இது சூரிய ஸ்தலமாகும். சூரியபகவான் இத்தலத்தில் பூஜித்துள்ளார். இக்கோயில் ஐந்து பிரகாரங்களை கொண்டது. இங்குள்ள முக்தி மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தால் மனம் நிம்மதி கிடைக்கிறது. சூரியன் இந்த கோயிலில் மேற்கு திசை நோக்கி உள்ளார்.

    சிவனுக்கு வடைமாலை:

    ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துவார்கள். ஆனால் ஈசுவரனுக்கு ஒரு கோயிலில் வடைமாலை சாத்துகிறார்கள். இத்தலத்தில் தெற்கு கோபுர வாயிலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாத்தும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது. சிலசமயங்களில் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள்கூட சாற்றப்படுவதுண்டு.

    தலபெருமை

    இங்கே அம்பாள் அறம் வளர்த்த நாயகி எனப்படுகிறாள். ஆண்கள் தர்மம் செய்வதைவிட குடும்பத்தில் உள்ள பெண்கள் தர்மம் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.அந்த அடிப்படையில் உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் நாயகியாக, பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் தருமசம்வர்த்தினி என்ற பெயரில் அம்பாள் இங்கே எழுந்தருளி உள்ளாள்.எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் வகையில் அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.

    இவ்வூர் இறைவனுக்கு அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்து வந்தார். ஒருமுறை காசிக்கு சென்றதால் அவரால் பூஜைக்கு உரிய நேரத்தில் வரமுடியவில்லை. இந்த தகவல் அவ்வூர் அரசனுக்கு சென்றது. அவன் உடனடியாக கோயிலுக்கு வந்து பார்த்தபோது சம்பந்தப்பட்ட அர்ச்சகர் பூஜை செய்து கொண்டிருந்தார். மறுநாள் காசிக்கு சென்ற அர்ச்சகர் ஊரிலிருந்து திரும்பினார். ஊராரும் அரசனும் ஆச்சரியப்பட்டனர். இறைவன் இந்த அர்ச்சகர் மீது கொண்ட அன்பால் அர்ச்சகரின் வடிவில் வந்து, தனக்குத்தானே அபிஷேகம் செய்து கொண்டது தெரிய வந்தது. தன்னை வணங்குபவர்களுக்கு அன்பு செய்பவர் ஐயாறப்பர். அப்பர் பெருமான் இத்தலத்தில் வழிபட்டு கைலாய காட்சியை பெற்றார். எனவே இத்தலத்தில் வணங்கினால் கைலாயத்திற்கே சென்றதாக ஐதீகம். மானசரோவர் ஏரியில் மூழ்கிய அப்பர் பெருமான் இந்த திருத்தலத்தில் உள்ள குளத்தில் வந்து எழுந்தார். சூரிய புஷ்கரணி தீர்த்தம் எனப்படும் இந்த குளம் மிகவும் விசேஷமானது. இங்கே அம்பாள் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறாள். எனவே திருவையாறு எல்லைக் குட்பட்ட இடங்களில் பெருமாளுக்கு கோயில்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான விழா இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இன்று காலை ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு 7 ஊர்களை வலம் வர உள்ளார்.

    கோலாகலமாக நடைபெறும் இந்த விழாவில் ஐயாறப்பருடன், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டி வேர் பல்லக்கில் வலம் வருவார். ஐயாறப்பர், நந்திகேஸ்வரர் பல்லக்குகள் திருவையாறு, திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய 6 ஊர்களை வலம் வந்து, இரவு 6 ஊர் பல்லக்குகளும், தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது.

    தொடர்ந்து தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து திருவையாறு தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    நன்றி செலுத்தும் பெருவிழா

    நந்தியெம்பெருமான் திருமணத்திற்காக திருப்பழனத்திலிருந்து பழவகைகளும், திருச்சோற்றுத்துறையிலிருந்து உணவு வகைகளும், திருவேதிகுடியிலிருந்து வேத பிராமணர்களும், கண்டியூரிலிருந்து திருஆபரணங்களும், திருப்பூந்துருத்தியில் இருந்து மலர்களும், திருநெய்த்தானத்திலிருந்து நெய் வந்ததாகவும் அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு சப்தஸ்தான விழா நடத்தப்படுவதாகவும் ஐதீகம்.

    திறக்கும் நேரம்

    காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

    Next Story
    ×