search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்த சமூக சேவகருக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய ரஜினிகாந்த்
    X

    ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்த சமூக சேவகருக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய ரஜினிகாந்த்

    • மணிமாறன் என்பவர் தனது 16 வயது முதல் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.
    • இவர் உலக சாதனையாளர் விருது, கவுரவ டாக்டர் பட்டம் ஆகியவையும் பெற்றுள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 37). தனது 16 வயது முதல் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். இவர் செய்து வரும் சமூக சேவை கடினமானது. ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் மரணமடைந்து விட்டால் அவர்கள் உடல்கள் அரசு மருத்துவமனை பிணவறைகளில் கேட்பாரற்று பலநாட்கள் இருக்கும்.

    அதனை பெற எவரும் முன் வரமாட்டார்கள். அவ்வாறு பரிதாபத்துக்குரிய நிலையில் இருக்கும் உடல்களை போலீசார் அனுமதியுடன் பெற்று நல்லடக்கம் செய்து வருகிறார். கடந்த 21 ஆண்டுகளாக தொய்வின்றி இந்த பணியை அர்ப்பணிப்பு மனதுடன் செய்து வருகிறார். இதுவரை 2,045 ஆதரவற்றோர் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார். இவரது சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் விருதுகள் வழங்கியுள்ளன.

    பல மாநில முதல்-அமைச்சர்களின் பாராட்டுபெற்ற அவர் உலக சாதனையாளர் விருது, கவுரவ டாக்டர் பட்டம் ஆகியவையும் பெற்றுள்ளார். அவரை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்தி உள்ளனர். கொரோனா காலங்களிலும் மணிமாறன் இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்து வந்தார்.மேலும் தொழு நோயாளிகளுக்கு மனமுவந்து சேவையாற்றி வந்தார்.


    இதுபற்றி அறிந்த நடிகர் ரஜினிகாந்த், மணிமாறன் சேவையை மனதார பாராட்டி அவர் தடையின்றி சேவை செய்யும் வகையில் தனது அறக்கட்டளை சார்பில் ஒரு ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளார். மணிமாறன் தொடர்ந்து மக்கள் சேவை செய்ய ஊக்கம் அளித்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் வழங்கிய ஆம்புலன்ஸ் பெற்று கொண்ட மணிமாறன் கூறியதாவது:-

    நான் 21 ஆண்டுகளாக ஆதரவற்றவர்களின் உடலை அடக்கம் செய்து வருகிறேன் உடல்களைக் கொண்டு செல்வதற்காக வாடகை வேன்களை பயன்படுத்தி வந்தேன். இந்த நிலையில் எனது சேவை பற்றி அறிந்த நடிகர் ரஜினிகாந்த் என்னை சந்திக்க விரும்புவதாக அவரது உதவியாளர் போன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தார். இதனையடுத்து நேற்று காலை என்னை தயாராக இருக்கும்படி கூறினர்.

    நான் திருவண்ணாமலையில் அவர்களுக்காக காத்திருந்தேன் காலையில் ரஜினிகாந்த் வீட்டிலிருந்து அவரது உதவியாளர் காரில் திருவண்ணாமலைக்கு வந்தார். அங்கிருந்து என்னை சென்னையில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர் அங்கு சென்றதும் முதலில் எனக்கு உணவு வழங்கினார்கள்.

    ரஜினியிடம் 20 நிமிடம் சந்தித்து பேசினேன்.அப்போது அவர் எனது சேவையை பாராட்டினார். மேலும் எனக்கு ஆம்புலன்ஸ் வழங்கினார். எப்படி இவ்வளவு காலம் இந்த பணியில் ஈடுபட முடிகிறது என கேட்டறிந்தார். மேலும் குடும்ப வாழ்க்கை மிகவும் அவசியம். இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள். ஏதாவது உதவி தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள். நான் முடிந்த அளவு செய்கிறேன் என வாக்குறுதி அளித்தார். அவரிடம் நான் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன்.

    ரஜினிகாந்த் ஆம்புலன்ஸ் வழங்கியது என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அவரது இந்த உதவி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. ரஜினிகாந்த் வழங்கிய ஆம்புலன்ஸ் மூலம் ஆதரவற்றவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியும். மேலும் முதியவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லவும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×