

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் என பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தி.மு.க. தலைமையிலான கூட்டணியும், ஆட்சியை பிடிக்க அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயின் த.வெ.க. மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் களம் காண்கின்றன. இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு எதிராக அரசியல் கட்சி தொடங்குவதாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜயின் TVKவுக்கும் தனது அவரது AVK கட்சிக்கும் தான் போட்டி என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "அரசியலில் எனக்கு போட்டி நடிகர் விஜய் தான். எங்கள் இரண்டு கட்சிகளுக்கு இடையில் தான் போட்டியே. அவர் TVK நான் AVK. AVK என்றால் அண்ணா வளர்ச்சி கழகம். இந்த பெயரில் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கிறேன்.
கட்சி தொடக்க விழாவிற்கு அனைவரையும் அழைப்பேன். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். தற்போது தான் குழந்தை பிறந்ததை போல் கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளேன். எப்படியும் இந்த தேர்தலில் இல்லை என்றாலும், அடுத்த தேர்தலில் போட்டியிடுவோம்," என்றார்.
மருத்துவ பின்னணியில் இருந்து திரைத்துறைக்கு வந்த பவர் ஸ்டார் சீனிவாசன் காமெடி வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர். நடிப்பு மட்டுமின்றி இவர் மோசடி வழக்குகளில் சிக்கி சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.