

ரன்வீர் சிங் மற்றும் இயக்குநர் ஆதித்யா தார் கூட்டணியில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள்- துரந்தர், துரந்தர் தி ரிவெஞ்ச். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த ஸ்பை த்ரில்லர் திரைப்படங்கள் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றன.
இந்த நிலையில், துரந்தர் திரைப்படத்தின் மேக்கிங் காட்சிகளை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பரவசமூட்டும் சாகசக் காட்சிகள் முதல் தீவிரமான திரைக்கதை விவாதங்கள் வரை, இந்தத் திரைப்படம் இதுவரை கண்டிராத படப்பிடிப்பு தளக் காட்சிகள், இயல்பான தருணங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகும் என தெரிகிறது.
முன்னதாக 'துரந்தர்' படத்தின் இரண்டாம் பாகம் , ஜியோஹாட்ஸ்டாரில் வெளியிட ரூ. 155 கோடி மதிப்பிலான பிரம்மாண்டமான டிஜிட்டல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதன் மூலம், ஒரு இந்திப் படம் ஓ.டி.டி. தளத்தில் வாங்கிய மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றாக இது இடம்பிடித்துள்ளது.
துரந்தர் படத்தின் முதல் பாகம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகும் நிலையில், இரண்டாம் பாகம் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது. ரசிகர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே இப்படத்தைப் பார்க்க ஆவலாக இருந்தாலும், அவர்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஐ.பி.எல். 2026 சீசன் முடிந்த பிறகே "துரந்தர் தி ரிவெஞ்ச்" ஓ.டி.டி.-யில் வெளியாகும் என கூறப்படுகிறது.