

எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஜனநாயகன்’. கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வர இருந்த இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் படம் திரைக்கு வருவதில் இழுபறி நீடித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க ‘ஜனநாயகன்’ படம் ஆன்லைனில் கசிந்ததால் பலரும் கைதாகி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனிடையே, விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதனால் ‘ஜனநாயகன்’ படம் வெளியீட்டு தேதி குறித்த உறுதிப்படுப்படாத தகவல்கள் ஒவ்வொரு மாதமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில், இன்று ‘ஜனநாயகன்’ படம் வெளியீடு குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ள தகவலின் படி, ‘ஜனநாயகன்’ படத்திற்கான தணிக்கைச் சான்றிதழ் அடுத்த 3 நாட்களுக்குள் கிடைக்கும் என்றும் இப்படத்தை இந்த மாதமே வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ‘ஜனநாயகன்’ படம் ஜூலை 16 அல்லது ஜூலை 23 ஆகிய தேதிகளில் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது. இந்த வாரமே தமிழ்ப் பதிப்பிற்கான தணிக்கை பணிகள் நிறைவடைந்தாலும், பிற மொழிகளுக்கான தணிக்கை நடைமுறைகள் முடிய சுமார் ஒரு வாரம் ஆகலாம். அதன் பின்னரே படத்தின் இறுதி வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
முன்னதாக, ‘ஜனநாயகன்’ படம் வெளியீட்டு தேதி குறித்த பல்வேறு யூகங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் தற்போது உலா வரும் தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...