

கலை, இலக்கியம், மருத்துவம், விளையாட்டு, சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு குடியரசு தினத்தன்று பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த விருதுகள் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ என 3 பிரிவுகளை கொண்டது. இவற்றை இந்திய குடியரசு தலைவர் வழங்கி கவுரவிப்பார்.
இந்த ஆண்டுக்காக 5 பத்ம விபூஷண், 13 பத்ம பூஷண் மற்றும் 113 பத்மஸ்ரீ என மொத்தம் 131 விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் முதல்கட்ட விழா கடந்த மாதம் நடைபெற்ற போது 3 பிரிவுகளிலும் 66 விருதுகள் வழங்கப்பட்டன.
இதனை தொடாந்து விருது வழங்களின் 2-ம் கட்ட விழா பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் மொத்தம் 35 விருதுகள் வழங்கப்பட்டன. இதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் நடிகர் மாதவனும் ஒருவர் ஆவார்.
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பான் இந்தியா ஸ்டாரான மாதவன், நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கரங்களால் நேற்று பெற்றார். இதையடுத்து மாதவன் தற்போது நடித்துவரும் ஜி.டி. நாயுடுவின் பயோபிக் படத்தின் படக்குழு மாதவனை வாழ்த்தி போஸ்டர் வெளியிட்டுள்ளது. இந்த GDN படத்திற்காக மாதவன் தேசிய விருது பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.