தமிழ்நாடு

9499957575 எண்ணில் மூத்த குடிமக்கள் உதவிக்கு அழைக்கலாம்- முதியவர்களை பாதுகாக்கும் சென்னை போலீசின் 'பந்தம்'

Published On 2024-05-16 09:30 GMT   |   Update On 2024-05-16 09:30 GMT
  • சென்னை மாநகர காவல் துறையில் முதியவர்களுக்கு உதவி செய்வதற்காகவே கடந்த ஜனவரி மாதம் பந்தம் என்கிற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது.
  • பந்தம் திட்டத்தின் மூலமாக முதியவர்களை பாசத்தோடு கவனித்துக் கொள்வது என்கிற நோக்கத்தில் அதற்காக தனித்தனி காவலர்கள் கமிஷனர் அலுவலகத்தில் நியமிக்கப்பட்டு செயலாற்றி வருகிறார்கள்.

வயசான காலத்துல என்னால வெளியில போய் காய்கறி வாங்க முடியல. எனக்கு தினமும் இரண்டு கீரை கட்டு வேணும். உங்களால வாங்கித் தர முடியுமா? என்று கேட்டதும் ஓடோடி சென்று உதவி செய்திருக்கிறார்கள் சென்னை போலீசார்.

என்னது... சென்னை போலீஸ் கீரை வாங்குவதற்கெல்லாம் ஏற்பாடு செய்து கொடுக்கிறார்களா? என்று ஆச்சரியப்படுகிறீர்களா? இதனை நம்ப முடியவில்லையா? நம்பித்தான் ஆக வேண்டும். சென்னை போலீசார் முதியோர்களுக்காக அவர்களைத் தேடித் தேடி உதவி செய்து வருகிறார்கள். கரடு முரடான காக்கி சட்டைக்குள் இத்தனை கருணை உள்ளமா? என்று கண்களை ஆச்சரியத்துடன் விரிய வைக்கிறது சென்னை போலீசாருக்கும் முதியோர்களுக்கும் இடையேயான இந்த பந்த பாசப் பிணைப்பு.

கீரைக்கட்டு மட்டுமின்றி மருந்து மாத்திரைகளையும் கூட முதியவர்களுக்காக வாங்கி கொடுத்து உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் சென்னை மாநகர போலீசார். இப்படி முதியவர்களுக்காக அவர்களுக்கு என்னென்ன தேவைகள் உள்ளன என்பதை தேடி தேடி கண்டறிந்து தனியாக இருக்கும் முதியவர்களின் குடும்பத்தில் ஒருவர் போல தங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் சென்னை மாநகர காவல் துறையினர்.

சென்னை மாநகர காவல் துறையில் முதியவர்களுக்கு உதவி செய்வதற்காகவே கடந்த ஜனவரி மாதம் பந்தம் என்கிற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது. பரபரப்பான சென்னை மாநகரில் சென்னை வாசிகள் பலர் பெற்றோர்களை தனியாகவே தவிக்க விட்டு இருக்கிறார்கள் என்று கூறினால் அது மிகையாகாது. ஆசை ஆசையாய் வளர்த்து அவர்களை பார்த்து பார்த்து கவனித்த தாய் தந்தையர் பலரை பிள்ளைகள் தவிக்க விட்டு விட்டு தனியாகவே பிரிந்து வாழ்வதை பார்க்க முடிகிறது.

இது போன்ற நேரங்களில் முதியோர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு யாரும் இருப்பதில்லை. இதனால் பல்வேறு சிரமங்களை வயதானவர்கள் சந்தித்து வருகிறார்கள். தங்களுக்கு தேவையானதை யாராவது தினமும் வாங்கிக் கொடுக்கமாட்டார்களா? என்கிற ஏக்கம் தனியாக வசிக்கும் ஒவ்வொரு முதியவர்களின் மனதிலுமே மேலோங்கி காணப்படுகிறது. பெற்ற பிள்ளைகளே தவிக்க விட்டு விட்டு சென்று விடும் நிலையில் பக்கத்தில் இருப்பவர்களா ஓடோடி சென்று உதவி செய்துவிடப் போகிறார்கள்?



இப்படிப்பட்ட சூழலில் தான் முதியவர்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பந்தம் என்கிற பெயரில் சென்னையில் வசிக்கும் முதியவர்களுக்கு உதவுவதற்காக புதிய திட்டத்தை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலும் கலந்து கொண்டார்.

இந்த பந்தம் திட்டத்தின் மூலமாக முதியவர்களை பாசத்தோடு கவனித்துக் கொள்வது என்கிற நோக்கத்தில் அதற்காக தனித்தனி காவலர்கள் கமிஷனர் அலுவலகத்தில் நியமிக்கப்பட்டு செயலாற்றி வருகிறார்கள். கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மேற்பார்வையில் இணை கமிஷனர் கயல்விழி தலைமையில் பெண் போலீஸ் படையினர் 24 மணி நேரமும் 75 வயதை தாண்டிய முதியவர்களுக்கு உதவுவதற்காக தயாராக இருக்கிறார்கள். தங்களது தேவைகளுக்காக முதியவர்கள் 9499957575 என்ற கட்டணமில்லா இலவச செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தொலைபேசி எண்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு முதியவர்கள் எந்த நேரமும் அழைக்கலாம் என்று போலீசார் அறிவித்திருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பே இந்த தொலைபேசி எண் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் பிறகு சென்னை மாநகரிலுள்ள வயதான தாத்தா பாட்டிகளில் தனியாக வசிப்பவர்கள் தினமும் சென்னை போலீசை அழைத்து உதவி கேட்டு வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 28 பேர் தொடர்பு கொண்டு பேசி உள்ள நிலையில் இதுவரை

150-க்கும் மேற்பட்டோர் உதவி கேட்டு நாடி இருக்கிறார்கள். இப்படி உதவி கேட்டு பேசும் முதியவர்களில் பலர் தங்களது உணவு தேவைகளை பூர்த்தி செய்யவும் மருந்து மாத்திரைகள் வாங்கி தரவும் போலீசாரின் உதவியை நாடி உள்ளனர்.

வயதான மூதாட்டி ஒருவர் எனக்கு தினமும் கீரை வேண்டும். வெளியில் சென்று என்னால் வாங்க முடிவதில்லை அது கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா? என்று குழந்தைகள் தின்பண்டங்களை கேட்பது போல கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த பந்தம் பிரிவு போலீசார் அதற்கென்னம்மா... ஏற்பாடு செய்து விட்டால் போச்சு எனக் கூறி தினமும் கீரை கட்டு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கீரை வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரி ஒருவரிடம் சொல்லி மூதாட்டியின் வீட்டுக்கு தினமும் இரண்டு கட்டு கீரையை கொடுக்க அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதேபோன்று மேலும் சிலர் தங்களுக்கு சர்க்கரை நோய் உள்ளதாகவும் ஆனால் அதற்கான மருந்து மாத்திரைகளை வெளியில் சென்று வாங்குவதற்கு சிரமமாக உள்ளது என்றும் அதனை யாராவது வீடு தேடி வந்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர். அதற்கும் போலீசார் ஏற்பாடு செய்து உள்ளனர்.

அதே நேரத்தில் இட பிரச்சினை உள்ளது. அதனை தீர்ப்பதற்கு உதவி செய்ய முடியுமா? என்றும் முதியவர்கள் பலர் உதவி கேட்டுள்ளனர். இது போன்ற பிரச்சினைகளுக்கும் போலீ சார் சட்ட ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்கள். 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் இதுபோன்று தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ள சென்னை மாநகர காவல் துறையினர் முதியவர்களை பாதுகாக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த பந்தம் திட்டம் காவல்துறைக்கும் மூத்த குடிமக்களுக்கும் இடையேயான பாச பந்தம் என்று கூறி பெருமிதப்பட்டார் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர். ஆனால் சென்னை மாநகர காவல் துறையினர் பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். முதியவர்களை பாதுகாக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கியுள்ள இந்த பந்தம் சிறப்பு திட்டம் நிச்சயம் பாராட்டுதலுக்குரியதாகவே மாறியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. முதியோருக்கும் போலீசுக்கும் இடையேயான இந்த பாச பந்தம் காவலர்களை உணர்வுப் பூர்வமான மகன்களாக... மகள்களாகவும் மாற்றி இருக்கிறது என்றே கூறலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். அது 100 சதவீதம் உண்மைதான் என்பதையும் சென்னை போலீசாரின் செயல்பாடுகள் உணர்த்தியுள்ளன.

Tags:    

Similar News