search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்காவுக்கு ராசியான செஞ்சூரியன் மைதானம்
    X

    2-வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்காவுக்கு ராசியான செஞ்சூரியன் மைதானம்

    2-வது டெஸ்ட் போட்டி நடக்கும் செஞ்சூரியன், தென்ஆப்பிரிக்க அணியின் ஆதிக்கம் நிறைந்த மைதானம் என்பதால் இந்திய அணி தாக்குப்பிடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
    செஞ்சூரியன்:

    தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி கேப்டவுனில் நடந்த முதலாவது டெஸ்டில் 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தென்ஆப்பிரிக்காவின் அசுரவேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நமது அணியினர் 2-வது இன்னிங்சில் 135 ரன்னில் முடங்கினர்.

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு ராசியான மைதானங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு இதுவரை நடந்துள்ள 22 டெஸ்டுகளில் விளையாடியுள்ள தென்ஆப்பிரிக்கா அதில் 17-ல் வெற்றியும், 3-ல் டிராவும் கண்டு முத்திரை பதித்து இருக்கிறது. 2 டெஸ்டில் மட்டுமே (ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதராக) தோல்வியை சந்தித்துள்ளது.

    கேப்டவுன் போல் செஞ்சூரியனும் ஆசிய அணிகளுக்கு அலர்ஜி தான். இந்த மைதானத்தில் ஆசிய அணிகள் 7 டெஸ்டுகளில் (இந்தியா-1, பாகிஸ்தான்-2, இலங்கை-4) விளையாடி அனைத்திலும் தோல்வி அடைந்தது மட்டுமே மிச்சம். 2010-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக தென்ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுக்கு 620 ரன்கள் குவித்ததே இந்த மைதானத்தில் ஒரு அணியின் சிறந்த ஸ்கோராகும். இதே டெஸ்டில் இந்தியா 459 ரன்கள் எடுத்தது வெளிநாட்டு அணி ஒன்று இங்கு பதிவு செய்த அதிகபட்சமாகும்.

    செஞ்சூரியனும், உயிரோட்டமான ஆடுகளமாக இருக்க வேண்டும் என்று தென்ஆப்பிரிக்க அணியினர் விரும்புகிறார்கள். அதற்கு ஏற்ற வகையில் தான் இந்த ஆடுகளம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் மீண்டும் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் தாக்குதல் தொடுக்க தென்ஆப்பிரிக்கா வியூகங்களை தீட்டி வருகிறது.

    செஞ்சூரியன் ஆடுகள பராமரிப்பாளர் பிரையன் பிளாய் கூறுகையில், ‘சிறந்த ஆடுகளமாக இருக்கும் வகையில் இதை தயார் செய்து வருகிறோம். இது பந்துக்கும், பேட்டுக்கும் சமஅளவிலான போட்டி கொடுக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு. தொடக்கத்தில் பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும். அதன் பிறகு ஓரளவு பேட்ஸ்மேன்களுக்கு கைகொடுக்கும். போக போக, ஆடுகளத்தன்மையில் பெரிய அளவில் விரிசல் உண்டாகாது. புற்களும் அதிகமாக இருக்காது. ஆனால் நிச்சயம் வேகமும், பவுன்சும் கூடிய ஆடுகளமாக இருக்கும்’ என்றார்.

    தென்ஆப்பிரிக்கா கோலோச்சுவதை இந்திய அணியினர் இங்கு தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் அதற்கு ஒரு யுத்தமே நடத்த வேண்டி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.



    இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். 2-வது டெஸ்டுக்கான இந்திய அணியில் ஷிகர் தவானுக்கு பதிலாக லோகேஷ் ராகுல் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ரோகித் சர்மாவுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. 
    Next Story
    ×