search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது டெஸ்ட் டிரா: 12 வருடத்திற்குப் பிறகு தோல்வியை தவிர்த்த ஜிம்பாப்வே
    X

    2-வது டெஸ்ட் டிரா: 12 வருடத்திற்குப் பிறகு தோல்வியை தவிர்த்த ஜிம்பாப்வே

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்டை டிரா செய்ததன் மூலம், 12 வருடத்திற்குப் பிறகு முதன்முறையாக தோல்வியை தவிர்த்துள்ளது ஜிம்பாப்வே.
    ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் அணிளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் புலவாயோவில் கடந்த மாதம் (அக்டோபர்) 29-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 326 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 448 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்திருந்தது. 8-வது விக்கெட்டுக்கு டவ்ரிச் உடன் கேப்டன் ஹோல்டர் ஜோடி சேர்ந்தார். இருவரும் சதம் அடித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை சரிவில் இருந்து மீட்டனர். டவ்ரிச் 103 ரன்னும், ஹோல்டன் 110 ரன்களும் சேர்த்தனர். இந்த ஜோடி 212 ரன்கள் சேர்த்தது.



    இருவரின் ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 122 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஜிம்பாப்வே அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. மூர் 39 ரன்களுடனும், சிகந்தர் ரசா 58 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. மூர் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். சிகந்தர் ரசா 89 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வாலர் 15 ரன்னில் ஆட்டமிழந்தாலும், விக்கெட் கீப்பர் சகப்வா, கேப்டன் க்ரிமர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    இருவரின் ஆட்டத்தால் ஜிம்பாப்வே அணி 179 ரன்கள் முன்னிலைப் பெற்றது. ஐந்தாவது நாள் ஆட்டம் முடிவடைய நிலையில் இருந்ததால் ஜிம்பாப்வே அணி 144 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 301 ரன்கள் எடுத்திருக்கும்போது போட்டியை முடித்துக் கொள்ள இரண்டு அணி கேப்டன்களும் சம்மதம் தெரிவித்தனர். இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.



    சபாக்வா 71 ரன்னுடனும், க்ரிமர் 28 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருந்ததால் 1-0 எனத் தொடரைக் கைப்பற்றியது. இந்த போட்டியை டிரா செய்ததன் மூலம் ஜிம்பாப்வே அணி 12 வருடத்திற்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்த்துள்ளது.

    சிகந்தர் ரசா ஆட்ட நாயகன் விருதையும், வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் பிஷூ தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.
    Next Story
    ×