search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பார்முலா1 கார்பந்தயத்தில் ரெய்க்கோனன் (வலது), வெட்டல் ஆகியோரின் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட காட்சி
    X
    பார்முலா1 கார்பந்தயத்தில் ரெய்க்கோனன் (வலது), வெட்டல் ஆகியோரின் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட காட்சி

    சிங்கப்பூர் பார்முலா1 கார்பந்தயம்: ஹாமில்டன் முதலிடம்

    பார்முலா1 கார்பந்தயத்தில் இதுவரை நடந்துள்ள 14 சுற்று முடிவில் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் 263 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
    சிங்கப்பூர்:

    பார்முலா1 கார்பந்தயம் இந்த ஆண்டு 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 14-வது சுற்றான சிங்கப்பூர் கிராண்ட்பிரி அங்குள்ள மரினா ஓடுதளத்தில் நேற்று மழை பாதிப்புக்கு மத்தியில் நடந்தது. இதில் 308.828 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் கார்களில் சீறிப்பாய்ந்தனர். முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 2 மணி 03 நிமிடம் 23.544 வினாடிகளில் இலக்கை அடைந்து, முதலிடத்தை பிடித்தார். அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தது. இந்த சீசனில் அவர் பதிவு செய்த 7-வது வெற்றி இதுவாகும்.

    ஆஸ்திரேலியாவின் டேனியல் ரிக்கார்டோ (ரெட்புல் அணி) 2-வதாகவும், பின்லாந்தின் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ்), 3-வதாகவும் வந்தனர். போர்ஸ் இந்தியா அணிக்காக பங்கேற்று வரும் மெக்சிகோவின் செர்ஜியோ பெரேஸ் 5-வது இடத்தையும், பிரான்சின் ஈஸ்ட்பான் ஒகான் 10-வது இடத்தையும் பிடித்து முறையே 10, 1 புள்ளியை பெற்றனர்.

    ஹாமில்டனின் பிரதான போட்டியாளரும், 4 முறை சாம்பியனுமான ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டலின் கார், பின்லாந்தின் கிமி ரெய்க்கோனனின் காருடன் தொடக்க சுற்றிலேயே ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதால் அத்துடன் இருவரும் விலக நேரிட்டது.

    இதுவரை நடந்துள்ள 14 சுற்று முடிவில் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் 263 புள்ளிகளுடன் முதலிடத்திலும், வெட்டல் 235 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். அடுத்த சுற்று போட்டி அக்டோபர் 1-ந்தேதி மலேசியாவில் நடக்கிறது.
    Next Story
    ×