search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 2 ரன்னில் வீழ்ந்தது தென்ஆப்பிரிக்கா
    X

    பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 2 ரன்னில் வீழ்ந்தது தென்ஆப்பிரிக்கா

    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 330 ரன்களை விரட்டிய தென்ஆப்பிரிக்கா அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

    சவுத்தாம்ப்டன்:

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வருகிற 1-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கு முன்பு தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்துடன் 3 ஒருநாள் போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது.

    அதன்படி லீட்ஸ் மைதானத்தில் கடந்த 24-ந்தேதி நடந்த முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 72 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இரு அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி சவுத்தாம்ப்டனில் நேற்று பகல்-இரவாக நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டிவில்லியர்ஸ் இங்கிலாந்து அணியை முதலில் விளையாட அழைத்தார்.

    இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன் குவித்தது.

    பென்ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 79 பந்துகளில் 101 ரன் குவித்தார். இதில் 11 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். 55-வது போட்டியில் விளையாடும் அவருக்கு இது 4-வது சதமாகும். பட்லர் 53 பந்தில் 65 ரன் (7 பவுண்டரி) எடுத்தார்.

    பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 328 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் அந்த அணி 2 ரன்னில் தோற்றது.


    வெற்றி மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள்

    ஆட்டத்தின் கடைசி ஓவரில் தென்ஆப்பிரிக்கா வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. கிறிஸ்மோரிஸ், மில்லர் களத்தில் இருந்தனர். மார்க் வுட் வீசிய அந்த ஓவரில் முதல் 2 பந்தில் 2 ரன்னே எடுக்கப்பட்டது. 3-வது பந்தில் மில்லர் ரன் எடுக்க தவறினார். 4-வது பந்தில் 1 ரன் எடுத்தார்.

    இதனால் கடைசி 2 பந்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றிக்கு 4 ரன் தேவைப்பட்டது. 5-வது பந்தில் மோரிஸ் ரன் எடுக்க தவறினார். இதனால் ஆட்டம் பரபரப்பை எட்டியது.

    கடைசி பந்தில் 4 ரன் தேவை. பவுண்டரி அடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்பட்ட மோரிசால் 1 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் இந்த பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 2 ரன்னில் வெற்றி பெற்றது.

    தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற வேண்டிய ஆட்டத்தில் 2 ரன்னில் தோற்றது அதிர்ச்சியானதே. தொடக்க வீரர் குயின்டன் டிகாக் 98 ரன்னும், மில்லர் 51 பந்தில் 71 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் டிவில்லியர்ஸ் 52 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து அணி தரப்பில் பிளெங்கெட் 3 விக்கெட்டும், பென்ஸ்டோக்ஸ், மொய்ன்அலி தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    மார்க் வுட் கடைசி ஓவரை மிகவும் நேர்த்தியாக வீசியதால் இங்கிலாந்துக்கு வெற்றி கிடைத்தது.

    இந்த தோல்வி மூலம் தென்ஆப்பிரிக்கா 0-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. 3-வது மற்றும் கடைசி போட்டி நாளை (29-ந்தேதி) நடக்கிறது.

    Next Story
    ×