search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பையின் ‘வீறுநடை’க்கு தடை போடுமா புனே?
    X

    ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பையின் ‘வீறுநடை’க்கு தடை போடுமா புனே?

    மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் மும்பை அணியின் வீறுநடைக்கு புனே சூப்பர் ஜெயன்ட் முற்றுப்புள்ளி வைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
    இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி அதில் தொடர்ச்சியாக 6-ல் வெற்றியை பதிவு செய்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 12 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் மும்பை பலம் வாய்ந்ததாக விளங்குகிறது. இத்தனைக்கும் அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் மெச்சும்படி இல்லை.

    ‘லெக்-ஸ்பின்’ பந்து வீச்சை துல்லியமாக கணிக்க முடியாமல் வீழ்ந்து விடுகிறார். பேட்டிங்கில் ஜோஸ் பட்லர், பார்த்தீவ் பட்டேல், ஆல்-ரவுண்டர்களான பாண்ட்யா சகோதரர்கள், பொல்லார்ட், நிதிஷ் ராணா கைகொடுக்கிறார்கள். பந்து வீச்சில் மெக்லெனஹான், ஹர்பஜன்சிங், பும்ரா உள்ளிட்டோர் மிரட்டுகிறார்கள். இந்த சீசனில் மும்பை அணி அடைந்த ஒரே தோல்வி இதே புனே சூப்பர் ஜெயன்ட்டுக்கு எதிராகத்தான்.

    புனேயில் நடந்த அந்த ஆட்டத்தில் புனே அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்து இருந்தது. அதற்கு பழிதீர்க்க மும்பை வீரர்கள் வரிந்து கட்டி நிற்பார்கள். மும்பை அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால், தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற தனது முந்தைய சாதனையை (2008-ம் ஆண்டு தொடர்ந்து 6 வெற்றி) முறியடித்து விடும்.



    முதல் 4 ஆட்டங்களில் 3-ல் தோல்வியை தழுவிய புனே சூப்பர் ஜெயன்ட் அணி அதன் பிறகு கடைசியாக ஆடிய இரு ஆட்டங்களில் (பெங்களூரு, ஐதராபாத்துக்கு எதிராக) வெற்றி கண்டு புத்துணர்ச்சி பெற்றுள்ளது. டோனியும் பார்முக்கு திரும்பி விட்டார். ஐதராபாத்துக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 34 பந்துகளில் 61 ரன்கள் விளாசியதுடன் கடைசி பந்தில் வெற்றிக்குரிய ரன்னை அடித்து கலக்கினார். திரிபாதி, கேப்டன் ஸ்டீவன் சுமித், மனோஜ் திவாரியும் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளனர். அதே சமயம் ரஹானேவின் தடுமாற்றம் அந்த அணிக்கு கொஞ்சம் கவலை அளிக்கிறது.

    மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இதுவரை நடந்துள்ள 4 ஆட்டங்களிலும் மும்பை அணியின் வசமே வெற்றிக்கனி கனிந்துள்ளது. அவர்களின் வீறுநடைக்கு புனே சூப்பர் ஜெயன்ட் முற்றுப்புள்ளி வைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
    Next Story
    ×