search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல் கிளாசிகோ: ரியல் மாட்ரிட் அணியை 3-2 என வீழ்த்தியது பார்சிலோனா
    X

    எல் கிளாசிகோ: ரியல் மாட்ரிட் அணியை 3-2 என வீழ்த்தியது பார்சிலோனா

    பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகளுக்கிடையிலான எல் கிளாசிகோ போட்டியில் பார்சிலோனா 3-2 என ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது. மெஸ்சி இரண்டு கோல்கள் அடித்தார்.
    ஸ்பெயின் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் கால்பந்து தொடர் லா லிகா. புகழ்வாய்ந்த பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு ‘எல் கிளாசிகோ’ என்று பெயர். இரு அணிகளும் மோதும் ஆட்டத்தை உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசிப்பார்கள்.

    லா லிகா தொடரில் நேற்று நள்ளிரவு 2-வது ‘எல் கிளாசிகோ’ ரியல் மாட்ரிட்டுக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. தடை விதிக்கப்பட்டதால் பார்சிலோனா அணியில் நெய்மர் இடம்பெறவில்லை. சொந்த மைதானத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ரியல் மாட்ரிட் களம் இறங்கியது.

    ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்தில் பென்சிமா கொடுத்த பாஸை கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் நோக்கி அடித்தார். ஆனால் அவரது முயற்சி முறியடிக்கப்பட்டது. 9-வது நிமிடத்தில் பார்சிலோனாவின் இனியஸ்டாவின் முயற்சி முறியடிக்கப்பட்டது.

    11-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கேஸ்மிரோ மஞ்சள் அட்டை பெற்றார். 19-வது நிமிடத்தில் மார்சிலோ கொடுத்த பந்தை ரொனால்டா கோலாக்க முயன்றார். ஆனால் பார்சிலோனா அணி அதை தடுத்துவிட்டது. 23-வது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு வாய்ப்பை தவற விட்டார்.

    27-வது நிமிடத்தில் மார்சிலோ கொடுத்த பந்தை ரமோஸ் கோல் அடிக்க முயன்றார். பந்து கோல் கம்பத்தில் பட்டு திரும்பியது. இதை கேஸ்மிரோ சிறப்பாக கோலாக்கினார். இதனால் 28-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் 1-0 என முன்னிலைப் பெற்றது.



    33-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் இவான் ராகிடிக் கொடுத்த பந்தை, மெஸ்சி கோலாக மாற்றினார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலைப் பெற்றது. 38-வது நிமிடத்தில் பார்சிலோனாவின் சாமுவேல் உம்திதி மஞ்சள் அட்டை பெற்றார்.



    அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் முதல் பாதி நேரம் ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது. இடைவேளைக்குப்பின 2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியது. இரு அணி வீரர்களும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். மார்சிலோ கொடுத்த பந்தை டோனி க்ரூஸ் கோலாக்க முயன்றார். ஆனால் பலனில்லை. 52-வது நிமிடத்தில் பென்சிமாவிற்கு ஒரு வாய்ப் கிடைத்தது. அதுவும் பலனளிக்கவில்லை.



    73-வது நிமிடத்தில் பார்சிலோனாவின் இவான் ராகிடிக் ஒரு கோல் அடித்தார். இதனால் பார்சிலோனா 2-1 என முன்னிலைப் பெற்றது. 76-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் கேப்டன் செர்ஜியோ ரமோஸ் சிகப்பு அட்டை பெற்று வெறியேறினார். அதே நிமிடத்தில் டேனியல் கார்வாஜல் மஞ்சள் அட்டை பெற்றார்.



    ரமோஸ் வெளியேறியதால் ரியல் மாட்ரிட் அணி 10 வீரர்களுடன் விளையாடியது. ஆனால் நம்பிக்கை இழக்கவில்லை. 85-வது நிமிடத்தில் மார்சிலோ கொடுத்த பந்தை மாற்று வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் சிறப்பான வகையில் கோலாக மாற்றினார். இதனால் ஆட்டம் 2-2 என சமநிலைப் பெற்றது.

    இன்னும் 5 நிமிடங்கள் மட்டுமே இருந்ததால் போட்டி டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 90 நிமிடம் முடியும்போது ஸ்கோர் 2-2 என சமநிலையில் இருந்தது. போட்டி நிறுத்தம், காயம் போன்றவற்றை கணக்கில் கொண்டு 2 நிமிடங்கள் கூடுதல் நேரமாக கொடுக்கப்பட்டது. 92-வது நிமிடத்தின் கடைசி நொடிகளில் பார்சிலோனா கோல் கம்பம் பக்கத்தில் இருந்த பந்தை அந்த அணியின் வீரர்கள் மின்னல் வேகத்தில் கடத்திக் கொண்டு மெஸ்சியிடம் கொடுத்தனர். மெஸ்சி அருமையான கோலாக்கினார். இதனால் பார்சிலோனா 3-2 என வெற்றி பெற்றது.



    இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் பார்சிலோனா 33 போட்டிகளில் 75 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. 32 போட்டிகளில் அதே புள்ளிகளுடன் ரியல் மாட்ரிட் 2-வது இடத்தை பிடித்துள்ளது.
    Next Story
    ×