search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் துணை ராணுவத்தினரை இளைஞர்கள் விரட்டி தாக்குவதா?: ஷேவாக், காம்பீர் வேதனை
    X

    காஷ்மீரில் துணை ராணுவத்தினரை இளைஞர்கள் விரட்டி தாக்குவதா?: ஷேவாக், காம்பீர் வேதனை

    காஷ்மீரில் துணை ராணுவத்தினரை ஓட, ஓட விரட்டி இளைஞர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த வீடியோ காட்சி வைரலாக பரவியது. இந்த சம்பவத்துக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஷேவாக், காம்பீர் வேதனை தெரிவித்தனர்.
    புதுடெல்லி:

    காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினரை, துணை ராணுவத்தினரை அங்குள்ள இளைஞர்கள் கல்வீசி தாக்குவது தொடர் கதை ஆகி வருகிறது.

    சமீபத்தில் அங்கு இடைத்தேர்தல் நடந்த ஸ்ரீநகரில் கரல்போரா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினரை அவர்கள் ஓட, ஓட விரட்டி கற்களை வீசி தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தின.

    இது தொடர்பாக, சாதனை படைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் டுவிட்டரில் வேதனை தெரிவித்துள்ளார். அதில் அவர், “இது ஏற்றுக்கொள்ள முடியாதது. நமது துணை ராணுவத்தினரை இப்படி செய்யக்கூடாது. இத்தகைய கெட்ட செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொரு முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் காம்பீர் டுவிட்டரில் ஆக்ரோஷமாக கருத்து தெரிவித்துள்ளார்.



    அவர், “நமது ராணுவ வீரர்கள் மீது விழுகிற ஒவ்வொரு அடிக்கும், 100 பேரின் உயிரை வீழ்த்த வேண்டும். யாருக்கெல்லாம் இங்கே இருக்க இஷ்டம் இல்லையோ அவர்கள் எல்லாரும் நாட்டை விட்டு வெளியேறட்டும். காஷ்மீர் எங்களுக்கே உரித்தானது” என கூறி உள்ளார்.

    மேலும், “இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிற இவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். நமது தேசியக்கொடியில் உள்ள காவி நிறம் நமது கோபத்தீயின் அடையாளம். வெள்ளை என்பது போராளிகளுக்கான சவச்சீலை, பச்சை என்பது பயங்கரவாதத்திற்கு எதிரான வெறுப்புணர்வு” எனவும் கூறி உள்ளார்.

    தாக்குதலுக்கு உள்ளான துணை ராணுவத்தின் (மத்திய ஆயுதப்படை) ஐ.ஜி.ரவிதீப் சிங் சஹி செய்தி நிறுவனம் ஒன்றிடம் நேற்று பேசுகையில், “வீடியோ காட்சி உண்மையானதுதான். சம்பவம் எங்கு நடைபெற்றது, பாதிப்புக்குள்ளான படைப்பிரிவு எது என்பதை கண்டறிந்துள்ளோம். இதுதொடர்பாக தகவல்களை சேகரித்து சதூரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளோம். வழக்கு பதிந்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
    Next Story
    ×