search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐதராபாத் அணியின் வெற்றிப் பயணம் தொடருமா? மும்பையுடன் இன்று பலப்பரீட்சை
    X

    ஐதராபாத் அணியின் வெற்றிப் பயணம் தொடருமா? மும்பையுடன் இன்று பலப்பரீட்சை

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    மும்பை ;

    10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் லயன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.

    இந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இரவு நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது.
    எழுச்சி பெற்ற மும்பை

    டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியையும், 2-வது லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் அணியையும் வீழ்த்தி வலுவான நிலையில் உள்ளது.

    ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதலாவது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியிடம் தோல்வி கண்டாலும், அடுத்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 179 ரன் இலக்கை எட்டிப்பிடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எழுச்சி கண்டுள்ளது.



    ஐதராபாத் அணியில் ஷிகர் தவான், யுவராஜ்சிங், தீபக் ஹூடா, பென் கட்டிங் ஆகியோர் பேட்டிங்கிலும், புவனேஷ்வர்குமார், நெஹரா, ரஷித் கான் ஆகியோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் இருக்கின்றனர். மும்பை அணியில் பார்த்தீவ் பட்டேல், ஜோஸ்பட்லர், நிதிஷ் ராணா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், குணால் பாண்ட்யா, டிம் சவுதி, மெக்லெனஹான், மலிங்கா, ஹர்பஜன்சிங் போன்ற நல்ல பவுலர்களும் உள்ளனர்.

    இரு அணியிலும் அதிரடிக்கு பெயர் போன வீரர்கள் இடம் பெற்று இருப்பதால் இந்த போட்டியில் ரன் வேட்டை வேகத்தில் குறைவு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐதராபாத் அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசிக்க முழு முயற்சி எடுக்கும். அதேநேரத்தில் ஐதராபாத் அணியின் வெற்றிப்பயணத்துக்கு முட்டுக்கட்டை போட்டு, சொந்த மண்ணில் 2-வது வெற்றியை சொந்தமாக்க மும்பை அணி முனைப்பு காட்டும். எனவே சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மல்லுக்கட்டும் இந்த ஆட்டம் பரபரப்பு நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
    சமநிலை...

    மும்பை-ஐதராபாத் அணிகள் இதுவரை 8 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இரு அணிகளும் தலா 4 முறை வெற்றி கண்டு சமநிலை வகிக்கின்றன.
    Next Story
    ×