search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றியுடன் தொடங்குமா குஜராத் லயன்ஸ்?: கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்
    X

    வெற்றியுடன் தொடங்குமா குஜராத் லயன்ஸ்?: கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்

    கடந்த சீசனை போன்று வெற்றியுடன் தொடங்கும் ஆவலில் உள்ள குஜராத் லயன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை இன்று சந்திக்கிறது.
    ராஜ்கோட் :

    10-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜ்கோட்டில் நடக்கும் 3-வது லீக்கில் குஜராத் லயன்சும், முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதுகின்றன. கடந்த ஆண்டு உதயமான குஜராத் லயன்ஸ் அணி தனது முதலாவது சீசனிலேயே புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து வியப்பூட்டியது. ஆனால் இறுதிப்போட்டிக்கான இரண்டு தகுதி சுற்றிலும் தோல்வி அடைந்ததால் 3-வது இடத்தையே பெற முடிந்தது.

    குஜராத் கேப்டன் சுரேஷ் ரெய்னா, மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதற்கு அடித்தளமாக இந்த தொடரை பயன்படுத்திக்கொள்ளும் முனைப்புடன் உள்ளார். பிரன்டன் மெக்கல்லம், வெய்ன் சுமித், ஆரோன் பிஞ்ச், தினேஷ் கார்த்திக், பவுல்க்னெர் என்று அதிரடி வீரர்கள் குஜராத் அணியில் அணிவகுத்து நிற்கிறார்கள். கடந்த ஆண்டில் ‘பவர்-பிளே’யில் 70 ரன்களுக்கு மேல் 4 முறை குவித்த ஒரே அணி குஜராத் தான்.

    இதுவே அந்த அணியின் பேட்டிங் பலத்துக்கு அத்தாட்சி. தியோதர் மற்றும் விஜய் ஹசாரே கோப்பை இறுதி ஆட்டங்களில் செஞ்சுரி போட்டு மிரட்டிய தினேஷ் கார்த்திக்கின் பார்ம் நிச்சயம் குஜராத் அணிக்கு கூடுதல் போனசாக இருக்கும்.

    கிரிக்கெட் வாரியத்தின் அறிவுரைப்படி முதல் சில ஆட்டங்களில் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. அதனால் இன்றைய ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா ஆடமாட்டார். இதே போல் காயத்தால் அவதிப்படும் ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ 20-ந்தேதிக்குள் உடல்தகுதியை எட்டுவார் என்று குஜராத் அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டில் கொல்கத்தாவுக்கு எதிரான இரண்டு லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற குஜராத் அணி, அந்த அணிக்கு எதிராக ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்யும் ஆவலில் காத்திருக்கிறது.



    சரியான கலவையில் வீரர்களை கொண்டுள்ள அணிகளில் இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்சும் ஒன்று. ஆனால் ஊக்கமருந்து சர்ச்சையால் ஓராண்டு தடை நடவடிக்கைக்குள்ளான ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் இந்த ஆண்டு விளையாட முடியாமல் போனது கொல்கத்தாவுக்கு பெரிய இழப்பு தான். இன்னொரு ஆல்-ரவுண்டர் வங்காளதேசத்தின் ஷகிப் அல்-ஹசனும் இன்றைய ஆட்டத்தில் களம் காண வாய்ப்பில்லை. இதே போல் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கு முதல் இரு ஆட்டங்களில் ஓய்வு அளிக்கப்படுகிறது. இவை எல்லாம் கொல்கத்தாவுக்கு பலவீனம் என்றாலும் அந்த அணியின் நம்பிக்கை குறையவில்லை. கேப்டன் கம்பீர், உத்தப்பா, மனிஷ் பாண்டே, யூசுப் பதான், சூர்யகுமார் உள்ளிட்டோர் இந்த சீசனை வெற்றிகரமாக தொடங்கும் உத்வேகத்துடன் ஆயத்தமாக உள்ளனர்.

    குஜராத் அணியின் பயிற்சியாளர் பிராட் ஹாட்ஜ் கூறுகையில், ‘கொல்கத்தா அணி அபாயரமானது. அந்த அணியில் கம்பீர், உத்தப்பா போன்ற சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். பந்து வீச்சில் சுனில் நரின், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ் போன்ற திறமைசாலிகள் உள்ளனர். நிச்சயம் அந்த அணி சரிவில் இருந்து எழுச்சி பெறும் நோக்குடன் இருக்கும்’ என்றார்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    குஜராத் லயன்ஸ்: பிரன்டன் மெக்கல்லம், வெய்ன் சுமித், ஆரோன் பிஞ்ச், சுரேஷ் ரெய்னா (கேப்டன்), தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன், ஜேம்ஸ் பவுல்க்னெர், பிரவீன்குமார், ஜகாதி, தவால் குல்கர்னி, ஷிவில் கவுசிக்.

    கொல்கத்தா: கவுதம் கம்பீர் (கேப்டன்), உத்தப்பா, மனிஷ் பாண்டே, யூசுப் பதான், சூர்யகுமார் யாதவ், இஷாங் ஜக்கி, கிறிஸ் வோக்ஸ், குல்தீப் யாதவ், சுனில் நரின், டிரென்ட் பவுல்ட், கிறிஸ் லின் அல்லது காலின் கிரான்ட்ஹோம்.

    Next Story
    ×