search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஐ.பி.எல். 2017: எட்டு அணிகள் ஒரு பார்வை

    பத்தாவது இந்தியன் பிரீமியர் "லீக்" இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் 8 அணிகள் பற்றிய விவரம்:-
    கொல்கத்தா நைட்ரைடர்ஸ்:



    காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 3-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. அந்த அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. ஆந்த்ரே ரஸ்சல் இல்லாதது அந்த அணிக்கு பாதிப்பே.

    கேப்டன் காம்பீர், உத்தப்பாவின் தொடக்கம் கொல்கத்தா அணிக்கு பலமாக கருதப்படுகிறது. டாரன் பிராவோ, யூசுப் பதான், மனிஷ் பாண்டே, சூர்ய குமார் யாதவ், வோக்ஸ், சுனில் நரீன், டிரென்ட் போல்ட், குலதீப் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். 2012, 2014-ம் ஆண்டு சாம்பியனான கொல்கத்தா அணி கடந்த முறை 4-வது இடத்தை பிடித்தது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:



    வீரர்களின் காயம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. நல்ல நிலையில் இருக்கும் ராகுல் விலகியுள்ளார். கேப்டன் விராட் கோலி தோள்பட்டை காயத்தால் சில ஆட்டங்களில் ஆடமாட்டார். அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் நிலை தெரியவில்லை.

    பெங்களூர் அணியின் பலமே அதிரடியான பேட்டிங்தான். கிறிஸ் கெய்ல் முதுகெலும்பாக உள்ளார். தற்காலிக கேப்டன் வாட்சனும் சிறந்த ஆல்-ரவுண்டர் ஆவார். இங்கிலாந்தை சேர்ந்த டைமல் மில்சை ரூ.12 கோடிக்கு எடுத்துள்ளது. 20 ஓவர் போட்டியில் சிறந்த பவுலரான அவர் மீது அதிகமான எதிர்பார்ப்பு இருக்கிறது.

    3 முறை இறுதிப்போட்டியில் (2009, 2011, 2016) தோற்ற அந்த அணி இந்த தடவையாவது முதல் முறையாக கோப்பையை வெல்லும் வேட்கையில் இருக்கிறது.

    குஜராத் லயன்ஸ்:



    ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் கடந்த ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாடி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் தோற்று 3-வது இடத்தை பிடித்தது.

    கடந்த முறையை போலவே இந்த தடவையும் சிறப்பாக விளையாடும் ஆர்வத்தில் இருக்கிறது. பிரண்டன் மெக்குல்லம், வெய்ன் சுமித், பல்க்னெர் ஆரோன் பிஞ்ச், தினேஷ் கார்த்திக் மற்றும் புதிய வரவான ஜேசன் ராய் போன்ற சிறந்த வீரர்கள் லயன்ஸ் அணியில் இருக்கிறார்கள்.

    ஆல்-ரவுண்டர்களான ஜடேஜா, பிராவோ ஆகியோர் காயத்தால் 2 வாரம் ஆடாமல் போவது அந்த அணிக்கு இழப்பே. பந்துவீச்சில் பலவீனமாக இருக்கும் குஜராத் அணிக்கு இருவரும் திரும்பும் போது பலம் பெற்று திகழும். சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்ட அந்த அணி தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்:



    நடப்பு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஐ.பி.எல். கோப்பையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது.

    கேப்டன் வார்னர், யுவராஜ்சிங், ஷிகார் தவான், தீபக் ஷீடா, ரஷீத் கான், ஆப்கானிஸ்தான் வீரர் முகமது, பிரவீன் தாம்பே போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். பந்து வீச்சில் அந்த அணி பலம் பொருந்தி காணப்படுகிறது. நெக்ரா, முஷ்டாபிசுர் காயம் சரியாகி திரும்பும் வரை அணிக்கு சற்று பாதிப்பாகவே இருக்கும்.

    வார்னர், தவான் நல்ல நிலைக்கு திரும்புவதை பொறுத்தே ஐதராபாத் அணியின் பேட்டிங் இருக்கிறது.

    மும்பை இந்தியன்ஸ்:



    ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 3-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது. 2013 மற்றும் 2015-ம் ஆண்டு ஆதிக்கம் செலுத்திய அந்த அணி இந்த தடவையும் திறமையை வெளிப்படுத்தும் ஆவலில் உள்ளது. காயத்தில் இருந்து குணமடைந்த ரோகித் சர்மா, ஜோஸ் பட்லர், போல்லார்ட், ஹர்த்திக் பாண்டியா, லெண்டில் சிம்மன்ஸ், அம்பதி ராயுடு போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    பந்து வீசில் ஹர்பஜன், பும்ரா ஆகியோர் உள்ளனர். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழும் அந்த அணி சொந்த மண்ணில் மட்டும் சிறப்பாக ஆடுவது பலவீனமே.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப்:



    2014-ம் ஆண்டு போட்டியில் கோப்பையை இழந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது.

    கேப்டன் பதவியில் மில்லர் கழற்றி விடப்பட்டு மேக்ஸ்வெல் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் சிறந்த அதிரடி வீரர் ஆவார். மார்கன், ஸ்டானிஸ், மில்லர், வோரா, விருத்திமான் சகா போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். முன்னாள் அதிரடி வீரரான ஷேவாக்கின் ஆலோசனை பஞ்சாப் அணிக்கு பலன் உள்ளதாக அமையும். முரளி விஜய் காயத்தால் விலகியது பஞ்சாப் அணிக்கு பாதிப்பே. கடந்த ஐ.பி.எல். போட்டியில் அந்த அணி கடைசி இடத்தை பிடித்து இருந்தது.

    டெல்லி டேர்டெவில்ஸ்:



    9 ஐ.பி.எல். போட்டியிலும் விளையாடி இறுதிப்போட்டிக்கு நுழையாத ஒரே அணி டெல்லி டேர்டெவில்ஸ் ஆகும்.

    கடந்த ஆண்டு நடந்த போட்டியில் அந்த அணி 6-வது இடத்தை பிடித்தது. ஜாகீர்கான் தலைமையிலான அந்த அணி முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பைக்காக காத்திருக்கிறது.

    டுமினி, குயின்டன் டிகாக ஆகியோர் காயத்தால் ஆடாதது டெல்லி அணிக்கு பாதிப்பே. பந்து வீச்சில் பலத்துடன் காணப்படுகிறது. கும்மினஸ், மோரிஸ், ரபடா, அமித் மிஸ்ரா உள்ளனர். கோரி ஆண்டர்சன், கருண் நாயர், மேத்யூஸ், ரிசப்பன்ட் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.

    ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்:



    கடந்த போட்டியில் 7-வது இடத்தை பிடித்த ரைசிங் புனே அணி இந்த முறை ‘பிளே ஆப்’ சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

    கேப்டன் பதவியில் இருந்து டோனி நீக்கப்பட்டு சுமித் நியமிக்கப்பட்டுள்ளார். ரூ.14½ கோடி ஏலத்தில் எடுக்கப்பட்ட பென் ஸ்டோகஸ் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது. ரகானே, பாப் டு பிளிஸ்சிஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். அஸ்வின் காயத்தால் விலகியது புனே அணிக்கு பாதிப்பே. கேப்டன் பதவியில் இல்லாமல் விளையாடும் டோனி மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
    Next Story
    ×