search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா அணியில் ரஸ்சல் இடத்தை நிரப்ப அனைவரும் போராட வேண்டும்: காம்பீர்
    X

    கொல்கத்தா அணியில் ரஸ்சல் இடத்தை நிரப்ப அனைவரும் போராட வேண்டும்: காம்பீர்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆந்த்ரே ரஸ்சல் இடத்தை நிரப்ப அனைவரும் போராடுவது அவசியமானது என்று அந்த அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 5-ந்தேதி முதல் மே 21-ந்தேதி வரை நடக்கிறது. கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. அந்த அணி 2012 மற்றும் 2014-ல் கோப்பையை வென்று இருந்தது.



    வெஸ்ட்இண்டீஸ் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்சல் விளையாட முடியாமல் போனது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். ஊக்க மருந்து தொடர்பான விதிமுறையை மீறியதற்காக அவருக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஸ்சல் இந்த ஐ.பி.எல். போட்டியில் ஆடமாட்டார்.

    இந்த நிலையில் ரஸ்சல் இடத்தை நிரப்ப அனைவரும் போராடுவது அவசியமானது என்று கொல்கத்தா அணியின் கேப்டன் காம்பீர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-



    கொல்கத்தா அணியின் மிக சிறந்த வீரர்களில் ஒருவராக ரஸ்சல் திகழ்ந்தார். அவரது இழப்பை ஈடுகட்டுவது மிகவும் கடினமே. மனிஷ் பாண்டே பேட்டிங்கையும், அங்கீத் ராஜ்புத் பந்துவீச்சையும் இணைந்த கலவை ரஸ்சல் ஆவார்.

    இதனால் ரஸ்சல் இடத்தை நிரப்ப அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் கடுமையாக போராட வேண்டும். வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு காம்பீர் கூறினார்.

    கடந்த ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணி பிளேஆப் சுற்று வரை வந்து எலிமினேட்டரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் தோற்று 4-வது இடத்தை பிடித்தது.
    Next Story
    ×