search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டேரன் சமி, வருண் ஆரோன் வருகை புதிய யோசனைகளை கொடுக்கும்: சேவாக்
    X

    டேரன் சமி, வருண் ஆரோன் வருகை புதிய யோசனைகளை கொடுக்கும்: சேவாக்

    டேரன் சமி, வருண் ஆரோன் போன்ற சர்வதேச வீரர்கள் வருகை புதிய ஐடியாக்கள், திறமைகளை பஞ்சாப் அணிக்கு கொண்டு வரும் என்று அந்த அணியின் ஆலோசகர் சேவாக் கூறியுள்ளார்.
    ஐ.பி.எல். சீசன் 10 கிரிக்கெட் தொடர் வருகிற புதன்கிழமை (ஏப்ரல் 5-ந்தேதி) தொடங்குகிறது. இந்த தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற அனைத்து அணிகளும் விரும்புகின்றன. 9 ஆண்டுகளாக நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணி ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வென்றது கிடையாது.

    2014-ம் ஆண்டு சீசனில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. 2008-ல் 3-வது இடத்தையும், 2009-ல் 5-வது இடத்தையும், 2010-ல் 8-வது இடத்தையும், 2011-ல் 5-வது இடத்தையும், 2012-ல் 6-வது இடத்தையும், 2013-ல் 6-வது இடத்தையம், 2015 மற்றும் 2016 சீசனில் கடைசி இடத்தையும் பிடித்தது.

    இந்த சீசனில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று பஞ்சாப் அணி தீவிரமாக உள்ளது. சேவாக் அந்த அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். மேக்ஸ்வெல் புதிய கேப்டனாக பொறுப்பேற்க உள்ளார். டேரன் சமி, வருண் ஆரோன், தமிழ்நாட்டைச் சேர்ந்த டி. நடராஜன் போன்றோர் அந்த அணியில் புதிய வீரர்களாக சேர்ந்துள்ளனர்.

    இந்த வீரர்கள் புதிய ஐடியாக்கள் மற்றும் திறமைகளை அணிக்கு கொண்டு வருவார்கள் என்று சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘கூடுதலாக அணியில் இணைந்துள்ள டேரன் சமி, வருண் ஆரோன், டி.நடராஜன் போன்ற வீரர்கள் புதிய  யோசனைகள் மற்றும் திறமைகளை அணிக்கு கொண்டு வருவார்கள். இந்த அணி ஆக்ரோஷமான ஆட்டம், துணிச்சல், இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தும். நாங்கள் அதிக நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் இந்த சீசனில் விளையாட இருக்கிறோம். எங்கள் அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கான நோக்கத்தை நோக்கிச் செல்லும்.

    இந்த தொடருக்கான பஞ்சாப் அணி எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. ஏராளமான வீரர்களை நாங்கள் தக்க வைத்துள்ளோம். இது அணிகளுக்கிடையே கெமிஸ்ட்ரியை வளர்க்க உதவும்’’ என்றார்.
    Next Story
    ×