search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    10-வது ஐ.பி.எல். போட்டி: டிவில்லியர்ஸ் ஆடுவது சந்தேகம்
    X

    10-வது ஐ.பி.எல். போட்டி: டிவில்லியர்ஸ் ஆடுவது சந்தேகம்

    எந்த ஐ.பி.எல். போட்டியிலும் இல்லாத வகையில் இந்த ஐ.பி.எல். தொடரில் காயம் காரணமாக வீரர்கள் விலகுவது அதிகரித்து உள்ளது. தற்போது டிவில்லியர்சும் ஆடுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளன.
    சென்னை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது .

    ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற இந்தப்போட்டி ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

    10-வது ஐ.பி.எல். 20 ஒவர் போட்டி வருகிற 5-ந்தேதி முதல் மே மாதம் 21-ந்தேதி வரை ஐதராபாத், மும்பை, கொல்கத்தா, டெல்லி, புனே, பெங்களூர், மொகாலி, ராஜ்கோட், இந்தூர், கான்பூர் ஆகிய 10 நகரங்களில் நடக்கிறது.


    இதுவரை எந்த ஐ.பி.எல். போட்டியிலும் இல்லாத வகையில் இந்த ஐ.பி.எல். தொடரில் காயம் காரணமாக வீரர்கள் விலகுவது அதிகரித்து உள்ளது.

    இந்திய வீரர்களின் அஸ்வின், முரளிவிஜய், ராகுல் ஆகியோர் காயத்தால் விலகியுள்ளனர். அஸ்வின் புனே அணிக்காகவும், ராகுல் பெங்களூர் அணிக்காகவும், முரளிவிஜய் பஞ்சாப் அணிக்காகவும் ஆடி வருகிறார்கள்.

    தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் விளையாடாத வீராட்கோலி ஐ.பி.எல். போட்டியில் 2 வாரங்கள் ஆடமாட்டார். அவர் பெங்களூர் அணியின் கேப்டனாக இருக்கிறார்.

    இதுதவிர உமேஷ்யாதவ் (கொல்கத்தா), ரவிந்திர ஜடேஜா (குஜராத் லயன்ஸ்) ஆகியோருக்கு 2 வார காலம் ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் 2 வாரம் ஆட மாட்டார்கள்.


    வெளிநாட்டு வீரர்களில் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த குயின்டன் டிகாக், டுமினி (இருவரும் டெல்லி டேர்டெவில்ஸ்), ஆஸ்திரேலியாவை சேர்ந்த மிச்சேல் மார்ஷ் (புனே) ஆகியோர் காயத்தால் ஏற்கனவே விலகி இருந்தனர்.

    தற்போது முன்னணி வீரர்களில் ஒருவரான டிவில்லியர்சும் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவது சந்தேகமே. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அவரை வீராட்கோலி இடத்தில் கேப்டனாக நியமிக்க பெங்களூர் அணி நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது.

    டிவில்லியர்ஸ் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா உள்ளூர் போட்டியில் இருந்து விலகினார். இந்த காயம் காரணமாக அவர் ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகலாம் என்று கூறப்படுகிறது.


    ஐ.பி.எல்.லில் அவர் 92 ஆட்டங்களில் விளையாடி 2,586 ரன் எடுத்துள்ளார். இதில் 2 சதமும், 20 அரை சதமும் அடங்கும். இதனால் பெங்களூர் அணிக்கு வேறு ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படுவர்.

    மற்ற வெளிநாட்டு வீரர்களில் இலங்கையை சேர்ந்த மேத்யூஸ் (டெல்லி), நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் (பஞ்சாப்), வங்காளதேசத்தை சேர்ந்த முஸ்பாபிசுர் ரகுமான் (ஐதராபாத்) ஆகியோர் காயத்தால் தொடக்க நிலை போட்டிகளில் ஆடுவது சந்தேகமே.

    Next Story
    ×