search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீண்டு கொண்டே செல்லும் மிஸ்சிங் பட்டியல்: அஸ்வின், முரளி விஜய்யும் அவுட்?
    X

    நீண்டு கொண்டே செல்லும் மிஸ்சிங் பட்டியல்: அஸ்வின், முரளி விஜய்யும் அவுட்?

    ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகும் வீரர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தற்போது அஸ்வின், முரளி விஜய் விலகுவதாக செய்திகள் வந்து வண்ணம் உள்ளன.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் மிகப் பிரமாண்ட கிரிக்கெட் திருவிழா ஐ.பி.எல்.. இந்த தொடரின் 10-வது சீசன் ஏப்ரல் 5-ந்தேதி (வருகிற புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில் முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகிக் கொண்டு வருவது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    டெல்லி அணியில் இடம்பிடித்திருந்த ஜே.பி. டுமினி (சொந்த காரணத்திற்காக), குயிண்டான் டி காக் (காயம் காரணமாக) ஆகியோர் முதலில் இந்த தொடரில் இருந்து விலகினார்கள். அதன்பின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தோள்பட்டை காயம் காரணமாக பெங்களூர் அணியில் இடம்பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேவேளையில் அந்த அணியின் மற்றொரு முன்னணி வீரர் லோகேஷ் ராகுல் தோள்பட்டை காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    வங்காள தேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜூர் ரஹ்மான் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இணைவது சந்தேகம் எனக் கூறியுள்ளார்.

    இந்நிலையில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியில் இடம்பிடித்துள்ள முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் காயம் காரணமாக அணியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். தனது காயத்திற்காக அவர் 6 முதல் 8 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும். அதன்பின் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். காயத்திற்கான சிகிச்சையை விரைவில் மேற்கொள்ள இருக்கிறார்.

    பஞ்சாப் அணியில் இடம்பிடித்துள்ள முரளி விஜய்யும் இந்த தொடரில் கலந்து கொள்வது சந்தேகம் எனத் தெரிகிறது. இவர் பெங்களூருவில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் தோள்பட்டை காயத்தால் பங்கேற்கவில்லை. இவர் வெளிநாடு சென்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இந்திய அணி பிசியோவின் கருத்துக்குப்பின் மாற்று ஏற்பாடு செய்ய அணிகள் முடிவு செய்துள்ளன.

    இதற்கிடையில் இந்திய அணிக்காக 13 டெஸ்டில் தொடர்ந்து விளையாடிய உமேஷ் யாதவ், ஜடேஜா ஆகியோர் சில போட்டிகளில் பங்கேற்கமாட்டார்கள் எனத் தெரிகிறது.



    ஆகமொத்தம் இந்த தொடரில் முன்னணி வீரர்கள் பலர் பங்கேற்கமாட்டார்கள் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
    Next Story
    ×