search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லோகேஷ் ராகுலுக்குப் பதிலாக தமிழக வீரர் நாராயணன் ஜெகதீசன் இடம்பெற வாய்ப்பு
    X

    லோகேஷ் ராகுலுக்குப் பதிலாக தமிழக வீரர் நாராயணன் ஜெகதீசன் இடம்பெற வாய்ப்பு

    காயம் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இருந்து விலகிய லோகேஷ் ராகுலுக்குப் பதிலாக தமிழகத்தின் நாராயணன் ஜெகதீசன் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக உருவெடுத்து வருபவர் லோகேஷ் ராகுல். ஐ.பி.எல். தொடரில் இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வந்தார். பேட்ஸ்மேனுடன் விக்கெட் கீப்பர் பணியையும் சேர்த்து கவனித்தார். புனேவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் பந்தை சிக்சருக்கு தூக்கும்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்துடன் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடி ஆறு அரைசதங்கள் விளாசினார்.

    தற்போது காயத்திற்காக லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார். இதை அவர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

    இதனால் விக்கெட் கீப்பருடன் பேட்டிங் செய்யும் மாற்று வீரரை பெங்களூர் அணி தேடுகிறது. இதில் தமிழகத்தின் நாராயணன் ஜெகதீசன் என்பவரை ராகுலுக்குப் பதிலாக தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து நாரயணன் ஜெகதீசன் கூறுகையில் ‘‘ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்து அழைப்பு வந்தது. அப்போது ஏப்ரல் 2-ந்தேதி ஒத்திகையில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். எத்தனை வீரர்கள் இந்த ஒத்திகையில் கலந்து கொள்கிறார்கள் என்பது குறித்த தகவல் ஏதும் எனக்குத் தெரியாது.



    பெங்களூர் அணியில் இடம்பிடித்தால் மிகச் சிறந்ததாக இருக்கும். ஆனால், தற்போதைய நிலையில் அதிக எதிர்பார்ப்புடன் செல்லவில்லை’’ என்று கூறியுள்ளார்.

    தற்போது முடிந்த தியோதர் கோப்பையில் 21 வயதான தமிழக பேட்ஸ்மேனான நாராயணன் ஜெகதீசன் 190 ரன்கள் குவித்தார். சராசரி 63.33 ஆகும். மேலும், 2016 தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் அதிக ரன்கள் குவித்து, தொடர் நாயகன் விருதை பெற்றவர். இதனால் பெங்களூரு அணி அவரை குறிவைத்துள்ளது.
    Next Story
    ×