search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘உலக மன்னிப்பு தினம்’: கோலியிடம் மன்னிப்பு கேட்ட ஹாட்ஜ் குறித்து அஸ்வின் கருத்து
    X

    ‘உலக மன்னிப்பு தினம்’: கோலியிடம் மன்னிப்பு கேட்ட ஹாட்ஜ் குறித்து அஸ்வின் கருத்து

    விராட் கோலியின் காயம் குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பிராட் ஹாட்ஜ் விமர்சனம் செய்து பின்னர் மன்னிப்பு கேட்டுள்ள நிலையில், இதனை ‘உலக மன்னிப்பு தினம்’ என அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கோலி விளையாடவில்லை. ராஞ்சியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியின்போது விராட் கோலியின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அந்த காயம் 100 சதவீதம் குணமடையவில்லை என்பதால் தரம்சாலாவில் விளையாடவில்லை.

    தொடர் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் என்னுடைய காயம் 100 சதவீதம் குணமடைய சில வாரங்கள் ஆகும் என்று விராட் கோலி கூறியிருந்தார்.

    இந்நிலையில் ‘‘விராட் கோலி தரம்சாலா டெஸ்டில் விளையாடாததற்கு அடுத்த மாதம் தொடங்கும் ஐ.பி.எல். தொடரே காரணம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயம் காரணமாக ஆடவில்லை எனும்போது, ஏப்ரல் 5-ந்தேதி தொடங்கும் ஐபிஎல் முதல் போட்டியில் (இன்னும் 2 வாரங்களில்) அவர் ஆடினால் அது அசிங்கமானது’’ என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாட்ஜ் கூறியிருந்தார்.

    இதற்கு கடும் விமர்சனம் எழுந்த நிலையில், ஹாட்ஜ் தனது கருத்திற்கு இந்திய மக்கள், ரசிகர்கள், இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் குறிப்பாக விராட் கோலியிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார். மேலும், ‘‘யாரையும் காயப்படுத்துவதோ, விமர்சிப்பதோ அல்லது தரக்குறைவாக பேசுவதோ தனது எண்ணம் இல்லை’’ என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.



    இதையடுத்து இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் டுவிட்டரில் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். அதில் ‘‘நகைச்சுவையாக சொல்ல வேண்டுமென்றால், இந்த வருடத்தில் இருந்து மார்ச் 30-ந்தேதி ‘உலக மன்னிப்பு தினம்’ என்பதை நினைவில் கொள்ள வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

    ஏப்ரல் 5-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். தொடரில், குஜராத் லயன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஹாட்ஜ் இணைய உள்ளது குறிப்படத்தக்கது.
    Next Story
    ×