search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஞ்சி டெஸ்ட்: இந்தியா 603 ரன்கள் குவித்து டிக்ளேர்; 152 ரன்கள் முன்னிலை
    X

    ராஞ்சி டெஸ்ட்: இந்தியா 603 ரன்கள் குவித்து டிக்ளேர்; 152 ரன்கள் முன்னிலை

    ராஞ்சியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சில் 152 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 451 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் 178 ரன்னும், மேக்ஸ்வெல் 104 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 360 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலியாவை விட 91 ரன்கள் பின்தங்கியிருந்தது. புஜாரா 130 ரன்னுடனும், சகா 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் நங்கூரம் பாய்ச்சி நிற்கும் கப்பலை போல் ஆடுகளத்துடன் ஒட்டிக் கொண்டனர். இந்த ஜோடியை பிரிக்க ஆஸ்திரேலியா எவ்வளவு முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. அந்த அணி நான்கு ரிவியூ வாய்ப்பையும் பயன்படுத்தி வீணாக்கியது.

    இன்றைய 4-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்த ஜோடி விக்கெட் இழக்காமல் சிறப்பாக விளையாடியது. அதன்பின்பு தேனீர் இடைவேளை வரையும் விக்கெட் இழக்காமல் விளையாடினார்கள். இந்தியா தேனீர் இடைவேளை வரை 6 விக்கெட் இழப்பிற்கு 503 ரன்கள் குவித்திருந்தது. இரண்டு செசன் முழுவதும் விக்கெட் இழக்காமல் அபாரமாக விளையாடினார்கள்.

    புஜாரா 190 ரன்னுடனும், சகா 99 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. சகா ஒரு ரன் எடுத்து தனது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் 521 பந்துகளை சந்தித்து இரட்டை சதம் விளாசினார் புஜாரா.



    சகா சதமும், புஜாரா இரட்டை சதமும் அடித்த பின்னர் அதிரடியாக விளையாட முடிவு செய்தனர். இதனால் புஜாரா 202 ரன்னில் ஆட்டம் இழந்தார். இந்த ரன்னை எடுக்க அவர் 525 பந்துகளை சந்தித்தார். அடுத்து வந்த ஜடேஜாவும் அதிரடியாக விளையாடினார்.

    சகா 233 பந்துகளை சந்தித்து 117 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். 9-வது விக்கெட்டுக்கு ஜடேஜாவுடன் உமேஷ் யாதவ் ஜோடி சேர்ந்தார். உமேஷ் யாதவை ஒரு முனையில் வைத்துக் கொண்டு ஜடேஜா அதிரடி காட்டினார். ஜடேஜா 46 ரன்கள் எடுத்திருக்கும்போது உமேஷ் யாதவ் அவுட் ஆனார்.

    210-வது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஜடேஜா அரைசதம் அடித்தார். அவர் 51 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். அதே ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். அப்போது இந்தியா 9 வி்க்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் இந்தியா முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 210 ஓவர்களை சந்தித்து 9 வி்க்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் குவித்துள்ளது.



    இந்தியா முதல் இன்னிங்சில் 152 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இன்று குறைந்தது 8 ஓவருக்குமேல் இருக்கிறது. இன்றைய ஆட்டம் முடிவதற்கு முன் ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினால், இந்தியாவிற்கு சாதகமாக இந்த போட்டி மாறலாம்.
    Next Story
    ×