என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாகூர் வந்து விளையாடாத வெளிநாட்டு வீரர்கள் குறித்து விமர்சனம் செய்ய வேண்டாம்: அக்தர்
    X

    லாகூர் வந்து விளையாடாத வெளிநாட்டு வீரர்கள் குறித்து விமர்சனம் செய்ய வேண்டாம்: அக்தர்

    பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வந்து விளையாடாத வெளிநாட்டு வீரர்களை விமர்சனம் செய்ய வேண்டாம் என்று அக்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் நடத்தப்பட்டு வருகிறது. 2-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியை லாகூரில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. இதற்கு அணி உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

    வெளிநாட்டு வீரர்களை பாகிஸ்தான் வரவழைத்து விளையாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. ஆனால், லாகூரில் நடைபெற்ற குண்டு வெடிப்புகள் பின்னடைவை ஏற்படுத்தியது.

    இருந்தாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. முதல் குவாலிபையரில் பெஷாவர் ஷல்மி - குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் குவெட்டா 1 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் குவெட்டா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. தற்போது அந்த அணியில் லூக் ரைட், கெவின் பீட்டர்சன் போன்ற வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். இன்று நடைபெறும் போட்டியில் கராச்சி - பெஷாவர் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    கராச்சி அணியில் போபரா, கெய்ல், ஜெயவர்தனே, மெக்லாரன், பொல்லார்டு, சங்ககரா ஆகிய வெளிநாட்டு வீரர்கள் விளையாடுகிறார்கள்.

    பெஷாவர் அணியில் ஜோர்டான், மோர்கன், சமி, சாமுவேல்ஸ் போன்ற வெளிநாட்டு வீர்ரகள் இருக்கிறார்கள். இதில் வெற்றி பெறும் அணியின் வெளிநாட்டு வீரர்கள் லாகூர் செல்ல வேண்டியிருக்கும்.



    லாகூர் சென்று விளையாட வெளிநாட்டு வீரர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். இங்கிலாந்து ஆல் ரவுண்டர் லூக் ரைட் முதல் வீரராக பாகிஸ்தான் செல்ல முடியாது என்று அறிவித்துள்ளார். இப்படி தயக்கம் காட்டும் வீரர்களை விமர்சிக்கக் கூடாது என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதுகுறித்து அக்தர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘தோழர்களே பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு வீரர்களை விமர்சிக்கக்கூடாது. பி.எஸ்.எல். தொடரில் பங்கேற்ற ஒவ்வொரு வெளிநாட்டு வீரர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த வருடம் லாகூரில் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. 2018-ல் பி.எஸ்.எல். தொடரின் தொடக்க விழாவை லாகூரிலும், இறுதிப் போட்டியை கராச்சி அல்லது ராவல்பிண்டியில் நாம் நடத்தலாம், யாருக்குத் தெரியும்?’’ என்று பதிவு செய்துள்ளார்.
    Next Story
    ×