search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிவியூ வாய்ப்பை சரியாக பயன்படுத்த முடியாமல் திணறும் இந்தியா: 55-ல் 17 மட்டுமே வெற்றி
    X

    ரிவியூ வாய்ப்பை சரியாக பயன்படுத்த முடியாமல் திணறும் இந்தியா: 55-ல் 17 மட்டுமே வெற்றி

    ரிவியூ வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இந்தியா திணறி வருகிறது. 55-ல் 17 மட்டுமே அணிக்கு சாதகமாக முடிந்துள்ளது.
    டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டி.ஆர்.எஸ். என்ற ரிவியூ முறை பயன்படுத்தப்படுகிறது. நடுவர் கொடுக்கும் எல்.பி.டபிள்யூ. மற்றும் கேட்ச் போன்றவற்றில் சந்தேகம் இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    டோனி இருக்கும் வரை இந்த டி.ஆர்.எஸ். முறைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. விராட் கோலி கேப்டனாக வந்த பின்னர் டி.ஆர்.எஸ். முறைக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இங்கிலாந்து தொடரில் இருந்த இந்தியா டி.ஆர்.எஸ். முறையை பயன்படுத்தி வருகிறது.

    80 ஓவருக்கு ஒருமுறை 2 ரிவியூ வாய்ப்பு வழங்கப்படும். அதன்படி 55 முறை இந்தியாவிற்கு பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ரிவியூ வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் 17 முறைதான் இந்தியாவிற்கு வெற்றி கிடைத்துள்ளது. இதில் சராசரி 30.9 சதவீதமாகும்.

    புனே டெஸ்டின் 2-வது இன்னி்ங்சில் முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுல் பேட்டிங் செய்யும்போது தேவையில்லாமல் சுயநலத்திற்காக ரிவியூ கேட்டு வீணடித்தனர். பின்னர் வரும் வீரர்கள் நிலைத்து நின்று விளையாட ரிவியூ தேவைப்படும். இதுபோன்று வீணடிக்கும்போது மற்ற பேட்ஸ்மேன்களுக்கு பாதகமாக அமைந்துவிடும்.



    பந்து வீச்சில்தான் இந்தியா அதிக அளவில் ரிவியூ வாய்ப்பை தவறாக பயன்படுத்தியுள்ளது. 42-ல் 10 முறைதான் இந்தியாவிற்கு சாதகமாக அமைந்துள்ளது. பேட்டிங்கில் 13 முறையில் 7 முறை சாதகமாக அமைந்துள்ளது.

    கேப்டன்தான் இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்றாலும் விக்கெட் கீப்பர், பந்து வீச்சாளர் மற்றும் அருகில் நிற்கும் பீல்டரின் ஆலோசனைகளை நன்கு கேட்ட பிறகுதான் கேப்டன் முடிவு எடுக்க முடியும். ஆனால் அவர்கள் முடிவு சரியாக அமையவில்லை.

    ரிவியூ முறையை தேவையில்லாமல் கேட்பதற்கு முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் விக்கெட் கீப்பர் தாஸ்குப்தா கூறுகையில் ‘‘நடுவரின் மிகவும் மோசமான தீர்ப்பின் போதுதான் டிஆர்எஸ் முறையை பயன்படுத்த வேண்டும். இது நடுவரை மிகவும் சரியாக தீர்ப்பு வழங்க உதவும் கருவி. பேட்ஸ்மேன் பேடில் பந்து படுவதற்கு முன் பேட்டில் பட்டதை 100 சதவீதம் உறுதி செய்தால் மட்டுமே ரிவியூ வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்பது என்னுடைய பார்வை.



    பந்து பேட்டில் பட்டதா அல்லது இல்லையா என்பது ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் தெரியும். பீல்டிங் அணிக்குதான் இது கவலை அளிக்கிறது. விக்கெட் கீப்பர்தான் டிஆர்எஸ் முறையின் கேப்டன். டிஆர்எஸ் முறையை கேட்க வேண்டாம் என்று கேப்டளிடம் சொல்ல வேண்டிய தேவையிருந்தால் அதில் உறுதியாக இருக்க வேண்டும். கீப்பரின் முடிவு கேப்டனுக்கு எளிதாக இருக்கும்’’ என்றார்.

    புனே டெஸ்டில் இந்தியாவிற்கு பந்து வீச்சின் போது கிடைத்த நான்கு ரிவியூ வாய்ப்பையும் வீணடித்தது. இதனால் ஸ்மித் எல்.பி.டபிள்யூ ஆனபோது பயன்படுத்த முடியாமல் போனது. பேட்டிங்கில் மூன்று முறையில் ஒரு முறைதான் வெற்றி கிடைத்தது.
    Next Story
    ×