search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலீஷ் லீக் கோப்பை இறுதிப் போட்டி: சவுத்தாம்ப்டனை வீழ்த்தி மான்செஸ்டர் சாம்பியன்
    X

    இங்கிலீஷ் லீக் கோப்பை இறுதிப் போட்டி: சவுத்தாம்ப்டனை வீழ்த்தி மான்செஸ்டர் சாம்பியன்

    இங்கிலீஷ் லீக் கோப்பை இறுதிப் போட்டியில் சவுத்தாம்ப்டனை 3-2 என வீழ்த்தி மான்செஸ்டர் யுனைடெட் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    இங்கிலீஷ் லீக் கோப்பைக்கான இறுதிப் போட்டி இந்திய நேரப்படி நேற்றிரவு 10 மணிக்கு நடைபெற்றது. விம்லே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மான்செஸ்டர், சவுத்தாம்ப்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியை 85 ஆயிரத்து 264 பேர் கண்டுகளித்தனர்.

    ஆட்டம் தொடங்கிய 19-வது நிமிடத்தில் மான்செஸ்டர் அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்தி ஸ்லேடன் இப்ராஹிமோவிச் கோல் அடித்தார். 38-வது நிமிடத்தில் அந்த அணியின் ஜெஸி லிங்கார்டு மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் மான்செஸ்டர் அணி 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

    அதற்குமேல் முதல் பாதி நேரமான 45 நிமிடம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் 2-0 என முதல்பாதி நேரத்தில் மான்செஸ்டர் அணி முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காயம் மற்றும் போட்டி நிறுத்தம் ஆகியவற்றை கணக்கிட்டு 2 நிமிடம் கூடுதல் நேரமாக வழங்கப்பட்டது. அதன் முதல் நிமிடத்தில் சவுத்தாம்ப்டன் அணியின் மனோலோ கேபியாடினி கோல் அடிக்க, முதல் பாதி நேரத்தில் மான்செஸ்டர் 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது.


    இரண்டு கோல்கள் அடித்த மனோலோ கேபியாடினி

    பின்னர் 2-வது பாதிநேரம் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் மனோலோ கேபியாடினி மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 2-2 என சமநிலைப் பெற்றது.


    ப்ரீஹிக் மூலம் கோல் அடிக்கும் இப்ராஹிமோவிச்

    அதன்பின் இரு அணி வீரர்களும் கோல்கள் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் முயற்சி பலனளிக்கவில்லை. ஆட்டம் முடிய 3 நிமிடங்கள் இருந்த நிலையில் 87-வது நிமிடத்தில் இப்ராஹிமோவிச் தலையால் முட்டி கோல் அடிக்க மான்செஸ்டர் அணி 3-2 என வெற்றி பெற்று இங்கிலீஷ் லீக் கோப்பையை வென்றது.


    சாம்பியன் கோப்பையுடன் மான்செஸ்டர் யுனைடெட் அணியினர்

    அந்த அணியின் பயிற்சியாளர் மவுரினோ, தான் பதவியேற்ற முதல் தொடரிலேயே அணியை சாம்பியன் பட்டம் பெற வைத்து சாதனைப் படைத்துள்ளார்.
    Next Story
    ×