search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் கண்ணோட்டம்
    X

    இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் கண்ணோட்டம்

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் டெஸ்ட் கண்ணோட்டங்கள் பற்றி சில தகவல்களை காண்போம்.
    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி 1947-ம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 226 ரன்னில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் இதுவரை 24 டெஸ்ட் தொடரில் மோதியுள்ளன. இதில் இந்தியா 7 தொடரையும், ஆஸ்திரேலியா 12 தொடரையும் கைப்பற்றியுள்ளன. 5 டெஸ்ட் தொடர் சமநிலையில் முடிந்தது.

    ஆஸ்திரேலியா அணி 14-வது முறையாக இந்தியா வந்துள்ளது. இதில் 4 தடவை மட்டுமே அந்த அணி தொடரை வென்று இருக்கிறது. 1956-ல் 2-0 என்ற கணக்கிலும், 1959-60-ல் 2-1 என்ற கணக்கிலும், 1969-ல் 3-1 என்ற கணக்கிலும், 2004-ல் 2-1 என்ற கணக்கிலும் தொடரை கைப்பற்றி இருந்தது. 2 முறை சமநிலை ஆனது. ஆஸ்திரேலிய அணி கடைசியாக இந்திய மண்ணில் விளையாடிய 3 தொடரிலும் (2008, 2010, 2013) தோற்று இருந்தது. 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் தொடரை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் ஆஸ்திரேலியா உள்ளது.



    2004-ம் ஆண்டு சிட்னி மைதானத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 705 ரன் குவித்ததே இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராகும். இந்திய மண்ணில் அதிகபட்சமாக கொல்கத்தா ஈடன் கார்டனில் 2001-ம் ஆண்டு 7 விக்கெட்டுக்கு 657 ரன் குவித்து இருந்தது.

    1948-ம் ஆண்டு அடிலெய்டுவில் 674 ரன் குவித்ததே ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச ஸ்கோராகும். இந்தியாவில் அந்த அணி டெல்லியில் 2008-ம் ஆண்டு அதிகபட்சமாக 577 ரன் குவித்து இருந்தது.

    இந்திய அணி 58 ரன்னில் சுருண்டதே (பிரிஸ்பேன், 1947) குறைந்தபட்ச ஸ்கோராகும். சொந்த மண்ணில் 2004-ல் மும்பையில் 104 ரன்னில் சுருண்டு இருந்தது. ஆஸ்திரேலியா 83 ரன்னில் சுருண்டதே (மெல்போர்ன், 1981) குறைந்தபட்ச ஸ்கோராகும். இந்தியாவில் அந்த அணி குறைந்த பட்சமாக 93 ரன்னில் (மும்பை, 2004), ‘ஆல்அவுட்’ ஆகி இருந்தது.



    தெண்டுல்கர் 39 டெஸ்டில் விளையாடி 3630 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இதில் 11 சதமும், 16 அரை சதமும் அடங்கும். அதிகபட்சமாக 241 ரன் குவித்து இருந்தார். அவருக்கு அடுத்தப்படியாக ரிக்கி பாண்டிங் 2555 ரன் (29 டெஸ்ட்) எடுத்து உள்ளார். அவரது அதிகபட்ச ரன் 257 ஆகும். லட்சுமண் 2434 ரன்னும் (29 டெஸ்ட்), டிராவிட் 2143 ரன்னும் (32), கிளார்க் 2049 ரன்னும் (22) எடுத்துள்ளனர்.

    ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்தவர் கிளார்க் 2012-ம் ஆண்டு சிட்னியில் 329 ரன் குவித்தார். அவருக்கு அடுத்தப்படியாக வி.வி.எஸ்.லட்சுமண் 281 ரன் (கொல்கத்தா, 2001) குவித்து இருந்தார். தெண்டுல்கர் 11 செஞ்சூரியுடன் முதலிடத்தில் உள்ளார். கவாஸ்கர், பாண்டிங் தலா 8 சதம் அடித்துள்ளனர்.

    கும்ப்ளே 111 விக்கெட் கைப்பற்றி (20 டெஸ்ட்) முதலிடத்தில் இருக்கிறார். 141 ரன் கொடுத்து 8 விக்கெட் சாய்த்தது அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும். ஹர்பஜன் சிங், 95 விக்கெட்டும், கபில்தேவ் 79 விக்கெட்டும், ஜாகீர்கான் 61 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

    இந்திய வீரர் ஜேசுபாய் பட்டேல் 1959-ம் ஆண்டு கான்பூர் மைதானத்தில் 69 ரன் கொடுத்து 9 விக்கெட் வீழ்த்தியது ஒரு இன்னிங்சின் சிறந்த பந்துவீச்சு ஆகும். ஒரு டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் ஹர்பஜன் சிங். 2001-ம் ஆண்டு சென்னையில் நடந்த டெஸ்டில் அவர் 15 விக்கெட் சாய்த்தார்.
    Next Story
    ×