search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரீஸ் அணியுடனான ஆட்டத்தில் பார்சிலோனா அணி படு தோல்வி
    X

    பாரீஸ் அணியுடனான ஆட்டத்தில் பார்சிலோனா அணி படு தோல்வி

    சாம்பியன்ஸ் லீக் கால் பந்து தொடரின் குரூப் பிரிவு ஆட்டத்தில், முன்னனி அணியான பார்சிலோனா, பாரீஸ் அணியிடம் 0-4 என்ற கணக்கில் படு தோல்வியடைந்தது.
    பாரீஸ்:

    ஐரோப்பிய நாடுகளில் உள்ள கிளப் அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று, பாரீஸ் நகரில் நடந்த குரூப் போட்டியில், பாரீசை சேர்ந்த பி.எஸ்.ஜி அணியும், முன்னனி கால்பந்து அணியான பார்சிலோனா அணியும் பலப்பரிட்சை நடத்தின.

    இரண்டு முக்கிய அணிகள் மோதும் போட்டி என்பதால் ரசிகர்கள் கூட்டம் மைதானம் முழுவதும் நிரம்பி வழிந்தது. உலகின் முன்னனி வீரர்களான மெஸ்ஸி, நெய்மர், சுவாரஸ் ஆகியோர் அடங்கிய பார்சிலோனா அணி பெரும் பலத்துடன் களமிறங்கியது. 

    பி.எஸ்.ஜி அணியும் டி மரியா, ஜூலியன் ஆகிய வீரர்களுடன் சமமான பலத்துடன் எதிரணியாக களமிறங்கியது. போட்டி பாரீசில் நடைபெற்றதால் ரசிகர்கள் ஆதரவும் பி.எஸ்.ஜி அணிக்கு பெரும் துணையாக இருந்தது.

    ஆட்டத்தின் தொடக்கம் முதலே பி.எஸ்.ஜி அணியினர் பந்தை தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர். இது எதிரணியினரை கடும் எரிச்சலை உண்டாக்கியது. இதனால், அவ்வப்போது சில வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆட்டத்தின் 18 வது நிமிடத்திலேயே பி.எஸ்.ஜி வீரர் டி மரியா கோல் அடித்து அசத்தினார். ஆட்டத்தின் 40 வது நிமிடத்தில் பி.எஸ்.ஜி அணி வீரர் ஜுலியன் டிராக்சியர் சிறப்பான கோல் ஒன்று போட மைதானம் முழுவதும் ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்தது. தொடர்ந்து பி.எஸ்.ஜி அணியினரே முதல் பாதி ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

    இடைவேளை முடிந்து போட்டி தொடங்கியதும் பதிலடி கொடுப்பதற்காக பார்சிலோனா வீரர்கள் சில முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், அது ஏதும் பலிக்கவில்லை. ஆட்டத்தின் 55 வது நிமிடத்தில் பி.எஸ்.ஜி வீரர் டி மரியா இரண்டாவது கோல் அடித்து வெற்றிப் பாதைக்கு வித்திட்டார். எதிர்த்துப் போராடிய பார்சிலோனா அணியின் முன்னனி வீரர்களின் முயற்சி எதுவும் எடுபடாமல் போனது.

    ஆட்டத்தின் 71 வது நிமிடத்தில் பி.எஸ்.ஜி வீரர் எடிசன் அற்புதமான ஒரு கோல் அடிக்க, பார்சிலோனா அணியின் வீரர்கள் விரக்தியின் உச்சத்திற்கே சென்றனர். இறுதியில் 4-0 என்ற கணக்கில் பி.எஸ்.ஜி அணியானது பார்சிலோனாவை வீழ்த்தியது. ஆட்டநாயகன் விருதை பி.எஸ்.ஜி அணியின் வெற்றிக்கு வித்திட்ட நாயகன் டி. மரியா வென்றார்.

    இரண்டு வருடங்களுக்கு பின்னர் பி.எஸ்.ஜி அணியானது பார்சிலோனாவை வீழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×