search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து கேப்டன் மோர்கன் - இந்திய கேப்டன் விராட் கோலி.
    X
    இங்கிலாந்து கேப்டன் மோர்கன் - இந்திய கேப்டன் விராட் கோலி.

    இந்தியா - இங்கிலாந்து மோதும் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது

    இந்தியா-இங்கிலாந்து மோதும் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் இன்று நடக்கிறது. இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
    கட்டாக் :

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. புனேயில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பரபாதி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. ஓட்டலில் அறைகள் கிடைக்காததால் 2 நாட்கள் புனேயிலேயே தங்கி இருந்த இவ்விரு அணி வீரர்களும் நேற்று தான் கட்டாக்குக்கு வருகை தந்து பயிற்சியில் ஈடுபட்டனர்.

    தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற விதம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. 351 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி 63 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து ஊசலாடிய போதிலும் எந்த ஒரு இக்கட்டான நிலைமையில் இருந்தும் தங்களால் ஜெயிக்க முடியும் என்பதை நமது வீரர்கள் நிரூபித்து காட்டினர். கேப்டன் விராட் கோலியும் (122 ரன்), கேதர் ஜாதவும் (120 ரன்) செஞ்சுரி அடித்து அணியை கரைசேர்த்தனர். குறிப்பாக 65 பந்துகளில் சதத்தை எட்டிய ஜாதவின் அதிரடி, வெகுவாக கவர்ந்தது. இன்றைய ஆட்டத்திலும் எதிர்பார்ப்புக்குரிய வீரராக ஜாதவ் இருக்கிறார்.

    ஷிகர் தவான், விக்கெட் கீப்பர் டோனி, யுவராஜ்சிங் தொடக்க ஆட்டத்தில் சொதப்பினர். அவர்கள் 2-வது ஆட்டத்தில் சாதிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்கள். அதே சமயம் பேட்டிங்குக்கு உகந்த கட்டாக் ஆடுகளத்திலும் பந்து வீச்சு எடுபடுவது சந்தேகம் தான். முந்தைய ஆட்டத்தில் ரன்களை வாரி வழங்கிய அஸ்வினுக்கு பதிலாக அமித் மிஸ்ராவை சேர்க்கலாமா என்பது குறித்து அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இந்த மோதலிலும் வாகை சூடி தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி வியூகங்களை தீட்டியுள்ளது.

    தொடக்க ஆட்டத்தில் 350 ரன்கள் குவித்தும் தோல்விபாதைக்கு தள்ளப்பட்டதை இங்கிலாந்து வீரர்களால் ஜீரணிக் கவே முடியவில்லை. பதிலடி கொடுக்கும் முனைப்புடன் தங்களை ஆயத்தப்படுத்தி வருகிறார்கள்.

    புனே போன்றே இந்த மைதானத்தின் எல்லை தூரமும் சற்று குறைவானது தான். அத்துடன் ஆடுகளம் முழுக்க முழுக்க பேட்டிங்குக்கு ஏற்ற வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம் எப்போதும் போல் ரன்குவிப்புக்கு சாதகமாகவே இருக்கும் என்று பிட்ச் பராமரிப்பாளர் கூறியுள்ளார். கடைசியாக இங்கு நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் (2014-ம் ஆண்டு) இந்தியா 363 ரன்கள் திரட்டி வெற்றி கண்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும். எனவே ரசிகர்களுக்கு ரன் விருந்து காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

    இன்றைய ஆட்டத்தை பொறுத்தவரை ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். மாலை 5.30 மணியில் இருந்தே இங்கு பனிபொழிய தொடங்கி விடுகிறது. பனிப்பொழிவின் தாக்கத்தின் மத்தியில் இரவில் பந்து வீசுவது லேசுப்பட்ட காரியம் அல்ல. பந்தை வசமாக பிடித்து வீசுவதற்கு சரியான ‘கிரிப்’ கிடைக்காது என்பதால் அவ்வாறான பந்து வீச்சை பேட்ஸ்மேன்கள் எளிதாக எதிர்கொண்டு ரன் குவிக்க முடியும். அதனால் ‘டாஸ்’ வெல்லும் அணி தயக்கமின்றி 2-வது பேட்டிங்கை தான் தேர்வு செய்யும்.

    இந்த மைதானத்தில் இந்திய அணி 15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 11-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி இங்கு நேருக்கு நேர் சந்தித்த 4 ஆட்டங்களில் 2-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் சந்தித்துள்ளது.

    2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இங்கு நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 92 ரன்களில் சுருண்டதை கண்டு ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்களை வீசி ஆட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தினர். மீண்டும் இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மைதானத்திற்குள் பழங்கள், தண்ணீர் பாட்டில்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் எடுத்து செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் எதையாவது தூக்கி வீசினால், உடனடியாக பிடித்து போலீசில் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.

    ரசிகர்களின் நடவடிக்கையை கண்காணிக்க மைதானம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), டோனி, யுவராஜ்சிங், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் அல்லது அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.

    இங்கிலாந்து: ஜாசன் ராய், அலெக்ஸ் ஹாலெஸ், ஜோ ரூட், ஜோஸ் பட்லர், மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷித் அல்லது பிளங்கெட், ஜாக் பால்.
    Next Story
    ×