search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி: இலங்கையை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது
    X

    3-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி: இலங்கையை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது

    ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான கடைசி டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 426 ரன்கள் குவித்தது. அம்லா 134 ரன்களும், டுமினி 155 ரன்களும் சேர்த்தனர். இலங்கை அணி சார்பில் பிரதீப் மற்றும் லஹிரு குமாரா ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. மேத்யூஸ் 11 ரன்னுடனும், சண்டிமல் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய மேத்யூஸ் மேலும் 8 ரன்கள் எடுத்து 19 ரன்னில் ஆட்டம் இழந்தார். சண்டிமல் 5 ரன்னோடு வெளியேறினார். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணி 45.4 ஓவர்களை மட்டுமே சந்தித்து 131 ரன்னில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பிளாண்டர், ரபாடா ஆகுயோர் தலா நாக்கு விக்கெட்டுக்களும், பர்னெல் மற்றும் ஆலிவியர் தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.



    தென்ஆப்பிரிக்காவை விட இலங்கை அணி முதல் இன்னிங்சில் 295 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால், பாலோ-ஆன் ஆனது. இதனால் இலங்கை அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    தென்ஆப்பிரிக்காவின் அதிவேக பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் மளமளவென விக்கெட்டுக்களை இழந்தது. இதனால் 42.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி 177 ரன்னில் சுருண்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பர்னெல் 4 விக்கெட்டும், ஆலிவர் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.



    இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 எனக்கைப்பற்றி இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது. முதல் இன்னிங்சில் 155 ரன்கள் குவித்த டுமினி ஆட்ட நாயகன் விருதையும், அந்த அணியின் தொடக்க வீரர் டீன் எல்கர் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றனர்.
    Next Story
    ×