search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் டி20 கிரிக்கெட்: வங்காள தேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து
    X

    முதல் டி20 கிரிக்கெட்: வங்காள தேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து

    கேன் வில்லியம்சின் அபார ஆட்டத்தால் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் வங்காள தேசத்தை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து.
    வங்காள தேசம் அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. ஏற்கனவே முடிவடைந்த இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை நியூசிலாந்து 3-0 எனக் கைப்பற்றியது.

    இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. நேப்பியரில் நடைபெற்ற முதல் போட்டியில் வங்காள தேசம் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் முதல் ஐந்து வீரர்களான தமீம் இக்பால் (11), இம்ருல் கெய்ஸ் (0), சபீர் ரஹ்மான் (16), சாஹிப் அல் ஹசன் (14), சவுமியா சர்கார் (0) ஆகியோர் விரைவில் ஆட்டம் இழந்தாலும், அடுத்து வந்த மெஹ்முதுல்லா 47 பந்தில் தலா மூன்று பவுண்டரி, சிக்சர்களுடன் 52 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார். இதனால், வங்காள தேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் குவித்தது.



    பின்னர் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் ப்ரூம், கேப்டன் வில்லியம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ப்ரூம் 6 ரன்கள் எடுத்த நிலையில் ருபெல் ஹொசைன் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கொலின் முன்றோவை ரன்ஏதும் எடுக்க விடாமல் டக்அவுட்டில் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார் முஷ்டாபிஜூர் ரஹ்மான்.

    அடுத்து வந்த கோரி ஆண்டர்சன் 13 ரன்னில் சாஹிப் அல் ஹசன் பந்திலும், ப்ருஸ் 7 ரன்னில் ரன்அவுட் முறையிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 10.1 ஓவரில் 62 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது. அப்போது நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 59 பந்தில் 80 ரன்கள் தேவையிருந்தது.



    5-வது விக்கெட்டுக்கு கேப்டன் வில்லியம்சனுடன் கிராண்ட்ஹோம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வங்காள தேசத்தின் பந்து வீச்சை துவம்சம் செய்து 18 ஓவர்களிலேயே 143 ரன்கள் எடுத்து, 12 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. வில்லியம்சன் 55 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 73 ரன்களுடனும், கிராண்ட்ஹோம் 22 பந்தில் மூன்று பவுண்டரி, மூன்று சிக்சர்களுடன் 41 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. 2-வது போட்டி 6-ந்தேதி நடக்கிறது.
    Next Story
    ×