search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து தொடருக்காக கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட விரும்பும் கோலி
    X

    இங்கிலாந்து தொடருக்காக கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட விரும்பும் கோலி

    இங்கிலாந்து தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார் விராட் கோலி.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்து தொடருக்குப்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக ஐந்து டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது.

    இந்திய மண்ணில் விராட் கோலி மிகவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதேசமயம், அவர் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மண்ணில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால்தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று கருதப்படுவார் என்ற விமர்சனமும் உள்ளது.

    அதற்குக் காரணம் 2014-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து சென்று விளையாடும்போது விராட் கோலியை குறிவைத்து அவருக்கு ஆண்டர்சன் மற்றும் பிராட் ஆகியோர் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பந்தை வீசி அவுட்டாக்கினார்கள். அந்த தொடரில் ஐந்து போட்டிகளில் விராட் கோலியின் சராசரி 13.40. அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் வரும் பந்தை ஆட கோலி திணறுகிறார் என்ற விமர்சனம் கடுமையாக எழுந்தது.



    இந்நிலையில், 2018-ல் இந்திய அணி இங்கிலாந்து சென்று விளையாட இருக்கிறது. அப்போது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் விராட் கோலி இருக்கிறார். இதற்காக அங்குள்ள சூழ்நிலையை நல்ல முறையில் தெரிந்துகொள்வதற்காக கவுண்டி போட்டியில் விளையாட தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘கவுண்டி போட்டியில் விளையாடக்கூடிய வாய்ப்பு கிடைத்தால், அதை நான் விரும்பி செய்வேன். இங்கிலாந்து தொடருக்கு ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதத்திற்கு முன்பாகவே இங்கிலாந்து செல்ல விரும்புகிறேன். அங்குள்ள சூழ்நிலையை புரிந்து கொண்டு குறிப்பிட்ட வருடத்தில் அங்குள்ள ஆடுகளம் எவ்வாறு பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கிறது என்பதை தெரிந்து கொள்ள அது உதவும்.



    இங்கிலாந்து தொடருக்கு முன் அந்த வாய்ப்பு கிடைத்தால் மிகச் சிறந்ததாக இருக்கும். இதைப்பற்றி நான் ஏற்கனவே சிந்தித்துள்ளேன்’’ என்றார்.
    Next Story
    ×