search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    17 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்திக்காத இந்திய அணி
    X

    17 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்திக்காத இந்திய அணி

    டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 17 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது இல்லை என்ற சாதனையை சமன் செய்ததுள்ளது. இதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    * டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 17 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது இல்லை என்ற சாதனையை நேற்று சமன் செய்தது. கடைசியாக 2015-ம் ஆகஸ்டு மாதம் காலேவில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி, அதன் பிறகு தோல்வி முகம் கண்டதில்லை. 1985-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 1987-ம் ஆண்டு மார்ச் வரையிலான காலகட்டத்தில் இந்திய அணி இதேபோல் 17 ஆட்டங்களில் தோல்வியை தொட்டதில்லை என்ற பெருமை பெற்றதையே தனது சாதனையாக வைத்து இருந்தது. அப்போது இந்திய அணி 4 ஆட்டத்தில் வெற்றியும், 12 ஆட்டத்தில் டிராவும், ஒரு ஆட்டத்தில் டையும் கண்டு இருந்தது. ஆனால் தற்போது 17 போட்டிகளில் 13 ஆட்டத்தில் வெற்றியும், 4 ஆட்டத்தில் டிராவும் கண்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் அணிகள் 17 போட்டிகளுக்கு மேல் தொடர்ச்சியாக தோல்வியை சந்திக்காத நிலை 6 சமயங்களில் அரங்கேறி இருக்கிறது. 1980-ம் ஆண்டு காலகட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 27 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை தொட்டு பார்க்காததே சாதனையாக இன்றளவும் நீடிக்கிறது.

    * இந்திய அணி தொடர்ச்சியாக 5-வது டெஸ்ட் போட்டி தொடரை வென்றுள்ளது. கடந்த ஆண்டில் இலங்கைக்கு எதிரான தொடரை (வெளியூரில்) 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, அதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை (உள்ளூரில்) 3-0 என்ற கணக்கிலும், வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரை (வெளியூரில்) 2-0 என்ற கணக்கிலும், உள்ளூரில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கிலும், இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு தொடரை 3-0 என்ற கணக்கிலும் வென்று இருக்கிறது. இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2010-ம் ஆண்டு ஜனவரி இடையிலான காலத்தில் இந்திய அணி 5 தொடரை இடைவிடாமல் வென்று இருந்தது. அந்த சாதனையை நேற்று சமன் செய்தது. டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக அதிக தொடரை வென்ற அணிகளில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை 9 முறை வென்று முதலிடத்தில் உள்ளன.

    * முதல் இன்னிங்சில் 400 மற்றும் அதற்கு மேல் ரன் எடுத்த அணி அந்த டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்திப்பது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 1930-ம் ஆண்டில் ஓவலில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவிடமும், 2011-ம் ஆண்டில் கார்டிப்பில் நடந்த போட்டியில் இலங்கை அணி, இங்கிலாந்திடம் இதேபோல் இன்னிங்ஸ் தோல்வியை கண்டது. இந்திய மண்ணில் ஒரு அணி முதல் இன்னிங்சில் 400 ரன்கள் எடுத்து விட்டு அந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியது இதுவே முதல் முறையாகும்.

    * இங்கிலாந்துக்கு எதிராக 116-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய இந்திய அணி பெற்ற 24-வது வெற்றி இதுவாகும்.

    * அலஸ்டயர் குக் தலைமையில் 58 டெஸ்ட் போட்டியில் ஆடிய இங்கிலாந்து அணி சந்தித்த 21-வது தோல்வி இதுவாகும். இதன் மூலம் அதிக டெஸ்ட் போட்டியில் தோல்வி கண்ட இங்கிலாந்து கேப்டன்கள் பட்டியலில் மைக்கேல் ஆர்தருடன்(51 டெஸ்டில் தலைமை தாங்கி 21 தோல்வி) குக் இணைந்தார்.

    * கேப்டன் விராட்கோலி தலைமையில் 21-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய இந்திய அணி பெற்ற 13-வது வெற்றி இதுவாகும். 6 ஆட்டத்தில் டிராவும், 2 ஆட்டத்தில் தோல்வியும் கண்டது. இந்த ஆண்டில் இந்திய அணி டெஸ்டில் பெற்ற 8-வது வெற்றி (11 டெஸ்டில்) இது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×