search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அகமதாபாத்தில் உருவாகிறது
    X

    உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அகமதாபாத்தில் உருவாகிறது

    குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் பட்டேல் கிரிக்கெட் மைதானம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாக இருக்கிறது.
    இந்தியாவில் சுமார் 25-க்கும் மேற்பட்ட சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளது. இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத் மோதிராவில் உள்ள சர்தார் பட்டேல் கிரிக்கெட் மைதானமும் ஒன்று.

    இந்த மைதானத்தை உலகத்தின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாக்க குஜராத் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. அதன்படி பழைய மைதானத்தை இடித்து புதிய மைதானத்தை கட்டுவதற்கான வேலையை லார்சன் அண்டு டூப்போ (L&T) நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.

    தற்போதைய பழைய மைதானத்தில் நடைபெறும் போட்டியை 54 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து ரசிக்கும்படியாக கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், புதிதாக கட்டப்படும் மைதானத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கும் வகையில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக கட்டப்பட இருக்கிறது.

    தற்போது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கருதப்படுகிறது. இந்த மைதானத்தில் ஒரு லட்சத்து 24 பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இந்த சாதனையை சர்தார் பட்டேல் கிரிக்கெட் மைதானம் முறியடிக்க இருக்கிறது.

    பெரிய மைதானத்தை கட்டும் அதேவேளையில் ரசிகர்களுக்கான பார்க்கிங் வசதி, குளிர்சாதன பெட்டிகள் வசதிகளை அதிகப்படுத்தும் கடமையும் உள்ளது.

    இந்த மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ராஜேஷ் பட்டேல் கூறியுள்ளார்.

    தற்போது இந்தியாவில் கொல்கத்தா ஈடன் கார்டனில் 66 ஆயிரம் ரசிகர்களும், ஷாகித் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 65 ஆயிரம் ரசிகர்களும், கொச்சியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் 60 ஆயிரம் ரசிகர்களும் ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் 60 ஆயிரம் ரசிகர்களும் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம்.
    Next Story
    ×