search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 400 ரன்கள் குவிப்பு
    X

    4-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 400 ரன்கள் குவிப்பு

    மும்பையில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 400 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
    மும்பை:

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் அறிமுக வீரர் ஜென்னிங்ஸ் சதம் அடித்தார். அவர் 112 ரன்னில் அவுட் ஆனார். கேப்டன் குக் 46 ரன்னும், மொயின் அலி 50 ரன்னும் எடுத்தனர்.

    நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன் எடுத்தது. அஸ்வின் 4 விக்கெட் கைப்பற்றினார். பென்ஸ்டோக்ஸ் 25 ரன்னுடனும், ஜோஸ் பட்லர் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் தொடர்ந்து விளையாடினார்கள். கேப்டன் விராட் கோலி வேகப்பந்து வீச்சை பயன்படுத்தாமல் சுழற்பந்து மூலம் தாக்குதல் தொடுத்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

    அஸ்வின் வீசிய 97-வது ஓவரின் கடைசி பந்தில் பென் ஸ்டோக்ஸ் ஸ்லிப் பகுதியில் நின்ற கோலியிடம் கேட்ச் ஆனார். இந்திய வீரர்கள் அப்பீல் செய்தனர். ஆனால் நடுவர் அவுட் கொடுக்க மறுத்ததால் கோலி டி.ஆர்.எஸ். முறையில் அப்பீல் செய்தார். இதில் பந்து பேட்டில் பட்டது தெளிவானது. இதையடுத்து பென் ஸ்டோக்சுக்கு அவுட் கொடுக்கப்பட்டது. அவர் 31 ரன் எடுத்தார். அப்போது ஸ்கோர் 297 ரன்னாக இருந்தது.

    இதன்மூலம் அஸ்வின் 5-வது விக்கெட்டை கைப்பற்றினார். அடுத்து கிறிஸ் வோக்ஸ் களம் வந்தார். இங்கிலாந்து 98.1 ஓவரில் 300 ரன்னை கடந்தது. தொடர்ந்து ஆடிய பட்லர் அரை சதம் கடக்க, மறுமுனையில் கிறிஸ் வோக்ஸ் 11 ரன்கள், ரஷித் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் என்ற நிலையை எட்டியது.

    உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஜேக் பால் 31 ரன்களிலும், பட்லர் 76 ரன்களிலும் அவுட் ஆக, இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் சரியாக 400 ரன்களில் முடிவுக்கு வந்தது. 9-வது விக்கெட்டுக்கு ஜேக் பால், பட்லர் இருவரும் சேர்ந்து 54 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா தரப்பில் அஸ்வின் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜடேஜா 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

    இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. துவக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், முரளி விஜய் ஆகியோர் விளையாடி வருகின்றனர். 
    Next Story
    ×