search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலியுடனான சந்திப்பு எனக்கு சிறந்த தருணம்: ஹசீப் ஹமீத்
    X

    விராட் கோலியுடனான சந்திப்பு எனக்கு சிறந்த தருணம்: ஹசீப் ஹமீத்

    ‘மொகாலி டெஸ்டிற்குப் பிறகு விராட் கோலி என்னை சந்தித்தார். இந்த சந்திப்பு எனக்கு சிறந்த தருணம்’ என்று இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹமீத் கூறியுள்ளார்.
    இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் 19 வயதே ஆன தொடக்க வீரரான ஹசீப் ஹமீத், இந்திய பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டார். ரன்கள் அதிக அளவில் குவிக்கவில்லை என்றாலும், சமாளித்து விளையாடினார். அவரது ஆட்டம் அனைவரையும் ஈர்த்தது.

    ராஜ்கோட் டெஸ்டில் அறிமுகமான அவர் அந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் 31 ரன்னும், 2-வது இன்னிங்சில் 82 ரன்களும் சேர்த்தார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 13 ரன்னும், 25 ரன்னும் எடுத்தார்.

    மொகாலி டெஸ்டில் முதல் இன்னிங்சில் 9 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். உமேஷ் யாதவ் வீசிய பந்து ஹமீத்தின் இடது கை சுண்டு விரலில் பட்டு ரகானேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். சுண்டு விரலில் பந்து வேகமாக பட்டதால் அவருக்கு முறிவு ஏற்பட்டது. இதனால் 2-வது இன்னிங்சில் தொடக்க வீரராக களம் இறங்கவில்லை. 8-வது வீரராக களம் இறங்கிய அவர் 59 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

    காயத்துடன் இந்தியாவின் பந்து வீச்சை சமாளித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த அவரை, இந்திய வீரர்கள் அனைவரும் கைகொடுத்து ஊக்கப்படுத்தினார்கள்.

    இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஹமீத் தங்கியிருந்த அறைக்குச் சென்று அவருடன் பேசினார். இந்த சந்திப்பு குறித்து ஹமீத் கூறுகையில் வீராட் கோலி என்னை சந்தித்தது, எனக்கு சிறந்த தருணம் என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஹமீத் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘விராட் கோலியுடன் சந்தித்தது எனக்கு மிகவும் சிறந்த தருணமாக இருந்தது. உண்மையிலேயே விராட் கோலி கபடமற்ற உண்மையான மனிதர். மொகாலி டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றபின், அவர் என்னை சந்தித்த ஒவ்வொரு நிமிடமும் சிறந்த நேரம்’’ என்றார்.
    Next Story
    ×