search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காயத்தால் ஹமீத், அன்சாரி விலகல்: இங்கிலாந்து அணியில் ஜென்னிங்ஸ், டாவ்சன் சேர்ப்பு
    X

    காயத்தால் ஹமீத், அன்சாரி விலகல்: இங்கிலாந்து அணியில் ஜென்னிங்ஸ், டாவ்சன் சேர்ப்பு

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி காயத்தால் விலகியுள்ள ஹமீத், அன்சாரிக்கு பதிலாக புதுமுக பேட்ஸ்மேன் கீடான் ஜென்னிங்ஸ், சுழற்பந்து வீச்சாளர் லியாம் டாவ்சன் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    லண்டன் :

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் ‘டிரா’ ஆன நிலையில், விசாகப்பட்டினம் மற்றும் மொகாலி டெஸ்டுகளில் படுதோல்வியை தழுவிய இங்கிலாந்து தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 8-ந்தேதி மும்பையில் தொடங்குகிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்துக்கு மேலும் ஒரு பின்னடைவாக இரு வீரர்கள் காயத்தில் சிக்கியுள்ளனர். இந்த தொடரில் அறிமுக வீரராக அடியெடுத்து வைத்த 19 வயதான ஹசீப் ஹமீத், இந்திய சுழற்பந்து வீச்சை சமாளித்து நிலைத்து நின்று ஆடுவதில் அனைவரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்தார். 3-வது டெஸ்டின் போது அவருக்கு இடது கை சுண்டு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் தொடரை விட்டு விலகியுள்ள அவர் உடனடியாக தாயகம் திரும்புகிறார். அங்கு அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட உள்ளது. இதே போல் முதுகுவலியால் அவதிப்படும் சுழற்பந்து வீச்சாளர் ஜாபர் அன்சாரியாலும் எஞ்சிய போட்டிகளில் ஆட முடியாது.

    இவர்களுக்கு பதிலாக புதுமுக பேட்ஸ்மேன் கீடான் ஜென்னிங்ஸ், சுழற்பந்து வீச்சாளர் லியாம் டாவ்சன் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதில் 24 வயதான இடக்கை ஆட்டக்காரர் ஜென்னிங்ஸ், தென்ஆப்பிரிக்காவில் பிறந்தவர். 72 முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி 12 சதம் உள்பட 4,272 ரன்கள் எடுத்துள்ளார். இவரது தந்தை ராய் ஜென்னிங்ஸ் தென்ஆப்பிரிக்காவில் முதல்தர கிரிக்கெட்டில் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இடக்கை சுழற்பந்து வீச்சாளர் டாவ்சன் இங்கிலாந்து அணிக்காக ஏற்கனவே ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டியில் ஆடியுள்ளார்.

    இங்கிலாந்து அணிக்கு இன்னொரு பிரச்சினையாக, ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்சும் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். மொகாலி டெஸ்டின் போது ‘பவுன்சர்’ பந்து தாக்கியதில் விரலில் காயம் அடைந்த அவர் அடுத்த டெஸ்டில் ஆடுவது சந்தேகம் தான்.

    இதற்கிடையே ஹசீத் ஹமீத் நேற்று முன்தினம் இந்திய கேப்டன் விராட் கோலியை சந்தித்து பேசினார். காயத்தையும் பொருட்படுத்தாமல் மொகாலி டெஸ்டில் 2-வது இன்னிங்சில் 8-வது வரிசையில் களம் இறங்கிய ஹமீத் 159 பந்துகள் (59 ரன்) தாக்குப்பிடித்து போராடிய விதத்தை கோலி பாராட்டினார். பேட்டிங் ஆலோசனைகளையும் கோலியிடம் இருந்து ஹமீத் பெற்றார்.
    Next Story
    ×