என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேகப்பந்து வீச்சாளர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த தடை விதிக்கக்கூடாது: அக்தர்
    X

    வேகப்பந்து வீச்சாளர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த தடை விதிக்கக்கூடாது: அக்தர்

    ஏராளமான விதிமுறைகளை கொண்டு வந்து வேகப்பந்து வீச்சாளர்களின் உற்சாக உணர்வுகளை வெளிப்படுத்துவதை தடுக்கக்கூடாது என்று அக்தர் கூறியுள்ளார்.
    பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ் என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவர், மைதானத்தில் பேட்ஸ்மேன்களை தனது வேகப்பந்தால் அச்சுறுத்துவதில் வல்லவர்.

    150 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசும் அக்தர், நீண்ட தூரத்தில் இருந்து ஓடி வந்து பந்து வீசக்கூடியவர். விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன் இரண்டு கைகளையும் பறவை இறகு போல் விரித்துக் கொண்டு ஓடுவார். இதை பார்ப்பதற்கு மிகவும் பரவசமாக இருக்கும். ரசிகர்கள் இதை மிகவும் ரசிப்பார்கள்.

    ஆனால், தற்போது வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சியை வெளிப்படையாக திறந்த மனதோடு வெளிப்படுத்த முடியவில்லை. அவர்களின் உற்சாகத்தின் வெளிப்பாடு அளவு கடந்து போவதாக ஐ.சி.சி. சில விதிமுறைகளை விதித்துள்ளது. இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர்கள் சந்தோசத்தை வெளிப்படுத்துவதில் ஐ.சி.சி. விதிமுறை கொண்டு வரக்கூடாது. அவர்களை சுதந்திரமாக விட்டுவிட வேண்டும் என்று சோயிப் அக்தர் ஐ.சி.சி.யை வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘வேகப்பந்து வீச்சாளர்களை வஞ்சிக்க முயற்சி செய்யக்கூடாது. அப்படி வஞ்சித்தால் கிரிக்கெட் போட்டி அதன் அழகை இழக்க நேரிடும். வேகப்பந்து வீச்சாளர்கள் நீண்ட தூரத்தில் இருநது ஓடி வந்து பந்து வீசி, விக்கெட்டுக்களை வீழ்த்தி அவர்களின் சந்தோசத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புவார்கள்.



    ஒரு வேகப்பந்து வீச்சாளர் அந்த அணிக்கு சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்த முயற்சி செய்யும்போது வேகமாக ஓடி வந்து உரத்த குரலில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். இதைவிட ஒரு வேகப்பந்து வீச்சாளரிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?



    இதனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க முயற்சிக்கக் கூடாது என்பதை கட்டாயமாக நான் கூறுவேன். பேட்ஸ்மேனுக்கும், பந்து வீச்சாளர்களுக்கும் இடையிலான உச்சக்கட்ட மோதலில்தான் பந்து வீச்சாளர்கள் பரவசத்தை வெளிப்படுத்த முடியும். இதுதான் உண்மையான கிரிக்கெட்’’ என்றார்.
    Next Story
    ×