என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஜிம்பாப்வே
    X

    வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஜிம்பாப்வே

    முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி ஜிம்பாப்வே அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
    ஜிம்பாப்வே நாட்டில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று கடைசி லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக விளையாடினார்கள். டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி 127 ரன்களுக்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. 9-வது விக்கெட்டுக்கு சிகந்தர் ரசாவுடன் சிசோரோ ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஜிம்பாப்வே அணியை சரிவில் இருந்து மீட்டது. சிகந்தர் ரசா அவுட்டாகாமல் 76 ரன்னும், சிசோரோ 42 ரன்னும் எடுக்க ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. அந்த அணியின் லெவிஸ் மற்றும் சார்லஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சார்லஸ் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். லெவிஸ் 9 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பிராத்வைட் 24 ரன்னிலும், ஹோப் 14 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 27.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது.

    தொடர்ந்து மழை பெய்ததால் டக்வொர்த் லிவிஸ் விதியின்படி போட்டியின் முடிவு கணிக்கப்பட்டது. டக்வொர்த் லிவிஸ் விதிப்படி வெஸ்ட் இண்டீஸ் அணி 27.3 ஓவர்கள் முடிவில் 130 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் 124 ரன்கள் மட்டுமே எடுத்திருந்ததால் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    27-ந்தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் ஜிம்பாப்வே அணி இலங்கையை எதிர்த்து விளையாட இருக்கிறது.
    Next Story
    ×