search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது டெஸ்ட்: டோனி ஸ்டைலில் ரன் அவுட் செய்து அசத்திய சகா
    X

    2-வது டெஸ்ட்: டோனி ஸ்டைலில் ரன் அவுட் செய்து அசத்திய சகா

    விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் டெஸ்டில் இந்திய விக்கெட் கீப்பர் சகா டோனி ஸ்டைலில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஹமீத்தை ரன் அவுட்டாக்கி அசத்தினார்.
    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனும், இந்தியாவின் நட்சத்திர கேப்டனும் ஆன டோனி விக்கெட் கீப்பராக செயல்படுவதில் வல்லவர். ஸ்டம்பிங் மற்றும் ரன்அவுட் ஆகியவற்றை கண்ணிமைக்கும் நொடியில் செய்து முடிப்பவர்.

    பொதுவாக டோனி பீல்டரிடம் இருந்து வரும் பந்தை ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து பிடிப்பதில்லை. ஸ்டம்பிற்கு முன்னால் சென்றுதான் பந்தை பிடிப்பார். சில நேரங்களில் ஸ்டம்பிற்கு முன் நின்று பந்தை பிடித்து அப்படியே பின்னோக்கி சரியாக ஸ்டம்பை நோக்கி எறிவார்.

    இதில் பெரும்பாலான பந்துகள் ஸ்டம்பை தாக்குவது வழக்கம். இப்படி பல எதிரணி பேட்ஸ்மேன்களை ரன்அவுட் ஆக்கி டோனி அசத்தியுள்ளார். அதேபோல்தான் இன்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சகா அபாரமான வகையில் ஹமீத்தை ரன்அவுட் செய்துள்ளார்.

    சகாவின் ரன்அவுட்டை டோனியுடன் ஒப்பிட்டு வருகின்றனர். ஆட்டத்தின் 21-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை டீப் மிட்விக்கெட் திசையில் ஜோ ரூட் அடித்தார். அப்போது ஒரு ரன் எடுத்த பின்னர் ஜோ ரூட் இரண்டு ரன்கள் எடுப்பதற்கு முயற்சி செய்தார். ஜோ ரூட் இரண்டு ரன்கள் எடுப்பதற்கு விரும்பியதால் ஹமீத் வேகமாக ஓட முயன்றார்.

    அப்போது ஜயந்த் யாதவ் பந்தை பிடித்து வேகமாக வீசினார். பந்து விக்கெட் கீப்பர் சகாவை நோக்கி வந்தது. ஆனால், பந்தை ஸ்டம்பிற்கு சற்று முன் விழுவதுபோல் வந்தது. உடனே சகா ஸ்டம்பிற்கு முன்னால் சென்று பந்தை பிடித்தார். பந்தை பிடித்த வேகத்தில் பின்நோக்கி ஸ்டம்பை நோக்கி எறிந்தார்.

    பந்து சரியாக ஸ்டம்பை தாக்கியதால் ஹமீத் ரன்அவுட் ஆனார். டோனியைபோல் அபாரமான வகையில் ரன்அவுட் ஆக்கி ஜோ ரூட் - ஹமீத் ஜோடியை சகா பிரித்தார்.
    Next Story
    ×